சர்ச்சையை கிளப்பிய ராமசாமி வசனம்.. விளக்கம் அளித்த சந்தானம்
படத்தில் சர்ச்சையான விஷயங்கள் எதுவும் இல்லை, முழுக்க முழுக்க ரசிகர்களை சிரிக்க வைக்க மட்டுமே என்று நடிகர் சந்தானம் தெரிவித்தார்.
சென்னை,
கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள புதிய படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'.
இந்த படம் குறித்து சந்தானம் வெளியிட்ட ஒரு வீடியோவில் பெரியாரை அவமதிப்பதுபோல் அவர் பேசியிருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. சர்ச்சையை தொடர்ந்து அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் இருந்து சந்தானம் நீக்கினார்.
இந்தநிலையில் இதுகுறித்து நடிகர் சந்தானம் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக பட விழாவில் அவர் பேசும்போது, 'டி.டி.ரிட்டன்ஸ் படத்துக்கு பிறகு எனக்கு ஒரு பெரிய ஹிட் தேவைப்படுது. அது 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் மூலம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இந்த படத்தை பற்றி நிறைய சர்ச்சையாக பேசுகிறார்கள். அதுமாதிரி எதுவுமே படத்தில் இருக்காது. இது ஒரு ஜாலியான படம். வடக்குப்பட்டி ராமசாமியின் கதை. இந்த பெயர் கவுண்டமணி காமெடியில் இருந்து வந்தது. நானும், இயக்குனர் யோகியும் கவுண்டமணி ரசிகர்கள். அதனால் தான் இந்த பெயரை வைத்தோம்.
நான் சினிமாவுக்கு வந்தது, மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான். யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. இது கடவுளுக்கும், என்னை நேசிக்கும் ரசிகர்களுக்கும் தெரியும். ரசிகர்களுக்கு புதிதாக எதையாவது கொடுக்கவேண்டும் என்பதால் தான் காமெடியில் இருந்து இன்னொரு பாதையில் பயணிக்கிறேன், என்று நடிகர் சந்தானம் கூறினார்.