ரஜினியின் 'ஜெயிலர்' திரைப்படத்திற்கு காலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை...!


ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்திற்கு காலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை...!
x

ரஜினியின் 'ஜெயிலர்' திரைப்படத்திற்கு காலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விநாயகன் வில்லனாக நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெயிலர்' படத்தின் ஷோகேஸ் இன்று (ஆகஸ்ட் 02) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் 'ஜெயிலர்' திரைப்படத்திற்கு காலை காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.அதனால் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஜனவரி மாதம் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு படம் ரிலீஸ் ஆன போது இரு தரப்பு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி துணிவு பட கொண்டாட்டத்தின் போது அஜித் ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தை அடுத்து இனி எந்த படத்திற்கும் அதிகாலை காட்சிகள் திரையிடப்படக்கூடாது என அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இதையடுத்து கடந்த 7 மாதங்களாக எந்த நடிகரின் படத்திற்கும் அதிகாலை காட்சிகள் திரையிடப்படவில்லை.


Next Story