நிறைமாத கர்ப்பம்.. பிரபல மலையாள டிவி நடிகை திடீர் மரணம்: ரசிகர்கள் அதிர்ச்சி
கருத்தமுத்து தொடரில் நடித்து பிரபலமான டாக்டர் பிரியா, திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றினார்.
மலையாள சின்னத்திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் டாக்டர் பிரியா (வயது 35). நிறைமாத கர்ப்பமாக இருந்த இவர், மருத்துவமனைக்கு சென்று வழக்கமான பரிசோதனைகள் செய்து வந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
அவரது வயிற்றில் இருந்த 8 மாத குழந்தையை டாக்டர்கள் காப்பாற்றினர். தற்போது குழந்தை ஐசியு-வில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டாக்டர் பிரியா மறைவு குறித்த செய்தியை, நடிகர் கிஷோர் சத்யா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
டாக்டர் பிரியாவின் மறைவு அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினர் என பலரும் ஆறுதல் கூறிவருகின்றனர்.
டாக்டர் பிரியா, 'கருத்தமுத்து' தொடரில் நடித்து பிரபலமானார். ஆனால் திருமணத்திற்குப் பிறகு நடிக்காமல் இருந்தார். மருத்துவரான அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றினார். மருத்துவ மேற்படிப்பு (எம்.டி.) படித்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, நடிகை ரெஞ்சுஷா மேனன் மரணம் அடைந்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் டிவி நடிகை பிரியா உயிரிழந்திருப்பது ரசிகர்களை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.