இறந்து விட்டதாக வதந்தி பரப்பிய பூனம் பாண்டே: 5 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு வாய்ப்பு?


இறந்து விட்டதாக வதந்தி பரப்பிய பூனம் பாண்டே: 5 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு வாய்ப்பு?
x
தினத்தந்தி 4 Feb 2024 2:09 PM IST (Updated: 4 Feb 2024 2:11 PM IST)
t-max-icont-min-icon

இறந்து விட்டதாக நாடகம் ஆடிய பூனம் பாண்டே மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என போலீசாருக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.

மும்பை,

பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு காரணமாக மரணமடைந்து விட்டதாக நேற்று முன்தினம் அவரது குடும்பத்தினரே அறிவித்தனர். பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே இந்த தகவல் பதிவிடப்பட்டது.

இதனால் அவரது ரசிகர்களும், திரையுலகினரும் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு இரங்கல் தெரிவித்தும் வந்தனர்.

இதற்கிடையில் தான் இறந்துவிட்டதாக வெளியிட்ட தகவல் பொய்யானது என்றும், நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்றும் கூறி பூனம் பாண்டே நேற்று ஒரு வீடியோ வெளியிட்டு மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தினார்.

அந்த வீடியோவில், 'நான் உயிரோடுதான் இருக்கிறேன். கருப்பை வாய் புற்றுநோய் தாக்கி ஏராளமான பெண்கள் தங்கள் வாழ்க்கையை இழக்கிறார்கள். ஆனால் மற்ற வகை புற்றுநோய்களை ஒப்பிடுகையில் கருப்பைவாய் புற்றுநோய் என்பது தடுக்ககூடிய நோய்தான்.

உரிய பரிசோதனைகளும், மருத்துவ சிகிச்சைகளும் எடுத்துக்கொண்டால் இந்த நோயில் இருந்து தப்பிக்க முடியும். உயிரிழப்பை தடுத்து நிறுத்தமுடியும். கொஞ்சம் கொஞ்சமாக நம்மை கொல்லும் கருப்பைவாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதனை செய்தேன், என்று பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பூனம் பாண்டேவை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில், நடிகை பூனம் பாண்டேதான் இறந்து விட்டதாக பொய் செய்தியை சமூக வலைதளத்தில் பரப்பிய நிலையில் அவர் மீது வழக்கு தொடர்ந்தால் அவருக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2000 ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67 படி சமூக வலைதளங்களில் தவறான செய்தியை பரப்பினால் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும், அதேபோல் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது. எனவே பூனம் பாண்டே மீது இந்த பிரிவுகளில் யாராவது வழக்கு தொடர்ந்தால் அவருக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

போலி செய்தியை பரப்பி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பூனம் பாண்டே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பிலிருந்தும் போலீசாருக்கு கோரிக்கை வந்துள்ளது. இல்லையெனில் பலரும் இதனை தவறான முன்னுதாரணமாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாக சட்டவல்லுநர்கள் கூறுகின்றனர்.


Next Story