பிப்பா டுவிட்டர் விமர்சனம்: ஏ.ஆர்.ரஹ்மான், இஷான் கட்டரை கொண்டாடும் நெட்டிசன்கள்
வங்காளதேச விடுதலைப் போரில் மேத்தா, அவரது உடன்பிறப்புகள் மற்றும் இந்திய ராணுவம் ஈடுபட்டதை சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பதாக கூறியுள்ளனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'பிப்பா' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்டத்தில், 1971ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போர் முக்கியமானதாக அமைந்தது. இந்த போரின்போது இந்தியாவின் கிழக்கு போர்முனையில் தனது உடன்பிறப்புகளுடன் இணைந்து துணிச்சலுடன் போரிட்ட கேப்டன் பல்ராம் சிங் மேத்தா மற்றும் போரின்போது நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து பரபரப்பான கதையம்சத்துடன் பிப்பா படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேத்தா கேரக்டரில் இஷான் கட்டர் நடித்துள்ளார். மிருணாள் தாக்கூர், பிரியான்ஷு, சோனி ரஸ்தான், இனாமுல்ஹக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் தங்கள் விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர். பெரும்பாலான ரசிகர்கள் படத்தை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள். இஷான் கட்டர், மிருணாள் தாக்கூருக்கு ரசிகர்கள் பாராட்டுமழை பொழிந்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மிகச்சிறப்பாக இருந்ததாகவும் கூறி உள்ளனர்.
வங்காளதேச விடுதலைப் போரில் மேத்தா, அவரது உடன்பிறப்புகள் மற்றும் இந்திய ராணுவம் ஈடுபட்டதை சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் அசத்தலாக இசையமைத்திருப்பதாகவும் ஒரு டுவிட்டர் பயனர் கூறியிருக்கிறார். இது சிறந்த ஒலிப்பதிவுடன், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய போர்க்கள திரைப்படம் என்றும் கூறியிருக்கிறார்.
சிறந்த நடிப்பு, வலுவான கதை நன்கு படமாக்கப்பட்டிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தொழில்நுட்ப ரீதியாக வெளியான சிறந்த காலகட்ட போர்க்கள படம். போர்க்களத்தில் திடீரென நடக்கும் கொடூர தாக்குதல் மற்றும் மனித உறவுகள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, என மற்றொரு பயனர் கூறியிருக்கிறார்.
"அனைத்து நடிகர்களும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக போர்க்கள காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சிலிர்க்க வைக்கிறது. பாகிஸ்தானை பிரித்து வங்காளதேசம் உருவாக்கப்பட்டது பற்றி அனைவரும் தெரிந்துகொள்வதற்கு அவசியம் பார்க்க வேண்டிய படம் இது" என ஒருவர் பதிவிட்டுள்ளார்.