ரிலீஸிற்கு முன்பே சாதனை படைத்த பார்த்திபனின் 'டீன்ஸ்'
இயக்குனர் பார்த்திபன் 'டீன்ஸ்' திரைப்படத்தை இயக்குகிறார். இப்படம் குழந்தைகளை மையமாக வைத்து உருவாகுகிறது.
இந்திய சினிமாவில் மூன்று தசாப்தங்களுக்கும் மேல் வெற்றிகரமாக இயங்கி வரும் நடிகர்-இயக்குனரான பார்த்திபன் 'டீன்ஸ்' எனும் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லர் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.
கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன் மற்றும் ரஞ்சித் தண்டபாணி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி மற்றும் அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் 'டீன்ஸ்' தயாராகியுள்ளது. கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்.
இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார் . ஒளிப்பதிவு பணிகளை காவ்மிக் ஆரி மேற்கொண்டுள்ளார். இவர்களுடன் பார்த்திபன் முதல் முறையாக இணைந்துள்ளார். இமான் மற்றும் காவ்மிக் ஆரியின் சிறந்த படைப்புகளில் முன்னணி வகிக்கும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ஆர். சுதர்சன் படத்தொகுப்பு மேற்கொள்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், 'டீன்ஸ்' திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பே சாதனை படைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, 'டீன்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வீடியோ முதல்முறையாக சென்சார் செய்யப்பட்ட ஃபர்ஸ்ட்லுக் வீடியோ என்ற பெருமையை பெற்றுள்ளது. இதனை உலக சாதனை அமைப்பு அங்கீகரித்து பாராட்டியுள்ளது.
இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இயக்குனர் பார்த்திபன், "TEENZ-first look-released in theatres with a censor certificate, இதுக்காக world book of records ஒரு சான்றிதழ் வழங்கினார்கள். அதை இ(சை)மானுக்கு பிறந்த நாள் பரிசாக வழங்க நேற்று ஒரு சின்ன மேடையமைத்துக் கொண்டாடினோம். இனி 'Teenz' உங்கள் மனதில் இடம் பெற தொடர் முயற்சிகள் முடுக்கி விடப்படும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.