"ஒரு நொடி" பட ஹீரோ தமன் குமார் நடிக்கும் 'பார்க்' டைட்டில் போஸ்டர் வெளியீடு


ஒரு நொடி பட ஹீரோ தமன் குமார் நடிக்கும் பார்க் டைட்டில் போஸ்டர் வெளியீடு
x

"ஒரு நொடி" பட ஹீரோ தமன் குமார் நடிக்கும் 'பார்க்' படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சென்னை,

'பார்க்' படத்தை ஈ.கே.முருகன் இயக்கியுள்ளார் . இவர் இயக்குநர் ஏ. வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக இருந்து சினிமா கற்றவர். அக்சயா மூவி மேக்கர்ஸ் சார்பாக லயன் நடராஜ் 'பார்க்' படத்தைத் தயாரித்துள்ளார்.இப்படத்தில் கதாநாயகனாக சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஒரு நொடி' படத்தின் கதாநாயகன் தமன் குமார் நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்வேதா டோரதி நடித்துள்ளார். பிரதான வில்லனாக யோகிராம் நடித்துள்ளார்.கதாநாயகியின் தந்தையாகத் தயாரிப்பாளர் லயன் ஈ.நடராஜ் நடித்துள்ளார்.இவர்களைத் தவிர காமெடியில் கலக்கி கொண்டிருக்கும் பிளாக் பாண்டி, ரஞ்சனா நாச்சியார், கராத்தே ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திருவண்ணாமலையில் ஒரு பூங்காவில் நடைபெறும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களில் நடந்துள்ளது.

படம் பற்றி இயக்குநர் ஈ.கே. முருகன் பேசும்போது, "இது ஒரு சஸ்பென்ஸ் ஹாரர் காமெடி கலந்த திரில்லர் என்ற வகையில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் கதையைத் தயாரிப்பாளரிடம் கூறிய போது நான் சொன்னேன். படத்தின் முதல் பாதி வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும்; இரண்டாவது பாதி இதயம் வலிக்கப் பயமுறுத்தும் என்றேன்.அதன்படி கதையையும் சொன்னேன் அவருக்குப் பிடித்திருந்தது.சரியாகத் திட்டமிட்டு 36 நாட்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்து, படத்தை நிறைவு செய்திருக்கிறோம்.

அண்மையில் வெற்றி பெற்ற "ஒரு நொடி" படத்தில் நடித்துள்ள தமன்குமார் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல் சமீபத்தில் வெளிவந்த லாந்தர் படத்தில் நாயகியாக நடித்த ஸ்வேதா டோரத்தி நாயகியாக நடித்துள்ளார்.அதேபோல் அண்மை வெற்றிப் படமான கருடன் படத்தில் வில்லனாக நடித்த யோகிராம் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஆகஸ்டில் இப்படத்தை வெளியிடுவதாகத் திட்டமிட்டு இருக்கிறோம்" என்றார்.


Next Story