விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த சுஷ்மிதா சென் - ஆதரவு தெரிவித்த பிரியங்கா, ரன்வீர் உள்ளிட்ட நட்சத்திரங்கள்
லலித் மோடியின் பதிவால் ரசிகர்கள் பலர் சுஷ்மிதா சென்-னை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
மும்பை,
ஐ.பி.எல். கிரிக்கெட் முன்னாள் தலைவர் லலித்மோடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார். 58 வயதான லலித் மோடி சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, '''என் வாழ்வில் ஒரு புது அத்தியாயம் தொடங்கியுள்ளது. சுஷ்மிதாவை காதலிக்கிறேன். அதே நேரத்தில் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. விரைவில் அதுவும் நடைபெறும்" என பகிர்ந்து இருந்தார்.
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பெரிய பேசுபொருளாக மாறியது. ரசிகர்கள் பலர் சுஷ்மிதா சென்னை கடுமையாக விமர்சனம் செய்தனர். குறிப்பாக பணத்திற்காக எதையும் செய்பவர் என்றெல்லாம் சிலர் விமர்சிக்கத் தொடங்கினர்.
இந்த நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில், ''நான் நானாகவே இருக்கிறேன். அறிவுஜீவிகள் என்று அழைக்கப்படுபவர்கள் தங்கள் அறியாமையால் மலிவான மற்றும் சில சமயங்களில் வேடிக்கையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அனைத்து வழிகளிலும் பணம் சம்பாதிக்கிறேன் என அறிவுஜீவிகள் கூறுகின்றனர். நான் தங்கத்தை விட ஆழமாக தோண்டுகிறேன். நான் எப்போதும் வைரங்களை விரும்புவேன். அதை நானே வாங்கிக்கொள்கிறேன்.
நான் ஒருபோதும் நிச்சயம் அல்லாத இந்த புகழ்வெளிச்சத்தில் வசிப்பவள் அல்ல. நான் எனது மனசாட்சியை மையப்படுத்தியே இருக்கிறேன்" என பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் அவரின் இந்த பதிவுக்கு தற்போது பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து சுஷ்மிதா சென் வெளியிட்ட பதிவில் முன்னணி சினிமா நட்சத்திரங்கள் அவருக்கு ஆதரவாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
நடிகை பிரியங்கா சோப்ரா பதிவிட்டுள்ள கமெண்டில் "அவர்களுக்கு (விமர்சர்களுக்கு ) சொல்லுங்கள் அரசியே " என்று தெரிவித்துள்ளார் மற்றொரு நடிகை ஷில்பா ஷெட்டி பதிவிட்டுள்ள கமெண்டில் "உங்களை நேசிக்கிறேன் சுஷ், மை ஸ்டார்" என்று பதிவிட்டுள்ளார். அதே போல் நடிகர் ரன்வீர் சிங் இதய எமோஜிகளை பதிவிட்டு அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தியா மிர்சா, நேஹா தூபி போன்ற பல நட்சத்திரங்களும் சுஷ்மிதா சென்-னின் பதிலடி பதிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.