நெட்பிளிக்ஸ் நிறுவனம் எடுத்த திடீர் முடிவு.. இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி...!
இந்தியாவில் மத்திய தணிக்கை வாரியம் சென்சார் செய்த பின்னரே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
புதுடெல்லி,
மக்களின் முக்கியமான பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றான திரைத்துறையிலும் நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஓடிடி தளம் என்ற புதிய தொழில்நுட்பத்துக்கு மிகுந்த வரவேற்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.
உலக அளவில் அதிக மக்களால் விரும்பப்படும் ஓடிடி தளமாக நெட்பிளிக்ஸ் விளங்குகிறது. இந்த தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், சீரிஸ்களுக்கு என்றே உலகம் முழுக்க பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்தியாவில் மத்திய தணிக்கை வாரியம் சென்சார் செய்த பின்னரே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாததாலும் பெரிய நடிகர்களின் திரைப்படங்களை முழுவதுமாக பார்க்க ரசிகர்கள் விரும்புவதாலும் சென்சார் செய்யப்படாத பதிப்புகளை சில நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.
இதன் காரணமாக திரைப்படங்களை திரையரங்குகளில் பார்ப்பதை விட ஓடிடியில் பார்ப்பதற்கே ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். இதனால் மத்திய அரசு ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களில் வயது வாரியான எச்சரிக்கை வாக்கியங்கள் இடம்பெற வேண்டுமென கட்டுப்பாடு விதித்திருந்தது.
இந்நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் எடுத்த புதிய முடிவால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி மத்திய தணிக்கை வாரியத்தால் சென்சார் செய்யப்பட்ட இந்திய திரைப்படங்களை மட்டும் சர்வதேச அளவில் வெளியிட நெட்பிளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வெளியாகும் திரைப்படங்களில் இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.