'எனது தனிப்பட்ட பயணம் இசை ஆர்வலர்களின் மனதை தொடும் கதையாக மாறுகிறது' - இளையராஜா நெகிழ்ச்சி


எனது தனிப்பட்ட பயணம் இசை ஆர்வலர்களின் மனதை தொடும் கதையாக மாறுகிறது - இளையராஜா நெகிழ்ச்சி
x

‘இசைஞானி’ இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார்.

சென்னை,

தேனி மாவட்டம் பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் 'இசைஞானி' இளையராஜா. 1976-ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில், பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுதி வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதுவரை இளையராஜா பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது 1,000-வது படம் இயக்குநர் பாலாவின் 'தாரை தப்பட்டை'. இவர் 2010-ம் ஆண்டு 'பத்ம பூஷன்' விருதையும் 2018-ம் ஆண்டு 'பத்ம விபூஷன்' விருதையும் பெற்றார்.

இந்நிலையில், 'இசைஞானி' இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட உள்ளது. இப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார். படத்தை தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியிடப்பட உள்ளது.

இந்த படத்தின் முதல் போஸ்டரை நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டார். இந்த நிலையில் இளையராஜா தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆரம்பத்தில் இது எனது தனிப்பட்ட பயணமாக இருந்தது. ஆனால் இப்போது அது உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான இசை ஆர்வலர்களின் இதயங்களைத் தொடும் ஒரு கதையாக மாறுகிறது. ஒட்டுமொத்த குழுவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.



Next Story