மம்மூட்டிக்கு இந்த முறை தேசிய விருது கிடைக்காததற்குக் காரணம் இதுதான்


மம்மூட்டிக்கு இந்த முறை தேசிய விருது கிடைக்காததற்குக் காரணம் இதுதான்
x

மம்மூட்டிக்குத் தேசிய விருது வழங்கப்படாதது குறித்து விளக்கமளித்திருக்கிறார் தேசிய திரைப்பட விருதுகள் நடுவர் குழுவில் இருந்த நடிகர் பத்மகுமார்.

2022ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகருக்கான விருது 'நண்பகல் நேரத்து மயக்கம்' திரைப்படத்திற்காக மம்மூட்டிக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.

மலையாளத் திரையுலக ரசிகர்கள் பலரும் மம்மூட்டிக்குச் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தனர். ஆனால், அதுவும் ஏமாற்றத்திலேயே முடிந்தது. இந்த ஏமாற்றத்தில் மலையாளத் திரையுலக ரசிகர்கள் பலரும் இது குறித்து சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி, மம்மூட்டிக்கு விருது வழங்கப்படாதது குறித்து தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வைரலாக்கினர்.

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்திருக்கும் தேசிய திரைப்பட விருதுகள் நடுவர் குழுவிலிருந்த நடிகர் பத்மகுமார், "மம்மூட்டியின் 'நண்பகல் நேரத்து மயக்கம்' ஒரு நல்ல திரைப்படம் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துமில்லை. அதில் மம்மூட்டியின் நடிப்பும் மிகச்சிறப்பாக இருந்தது. ஆனால் உண்மை என்னவென்றால், 'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்தை விருதிற்கு யாருமே சமர்ப்பிக்கவில்லை.

அப்படத்தின் தரப்பிலிருந்து எந்தவித முன்னெடுப்புகளும் எடுக்கப்படவில்லை. இதற்குக் காரணம் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால், 'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்தை விருதிற்கு யாரும் சமர்ப்பிக்கவில்லை என்பதுதான் உண்மை. இதற்குப் பின்னால் அரசின் அழுத்தங்கள் ஏதுமிருக்க வாய்ப்பில்லை. இதுபோன்ற அழுத்தங்கள் அரசியல் தரப்பிலிருந்து வர வாய்ப்பில்லை. வேறு தளங்களிலிருந்து வேண்டுமானால் அழுத்தங்கள் வந்திருக்கலாம்" என்று விளக்கமளித்திருக்கிறார்.


Next Story