எதிர்மறை விமர்சனங்கள் குறித்து மனம் திறந்த மோகன்லால்
1980ல் தனது முதல் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் மோகன்லால் எனது படங்கள் அனைத்தும் ஒரு கூட்டு முயற்சி என்றார் மோகன்லால்.
மலையாள திரைப்பட உலகின் முடிசூடா மன்னர்களாக விளங்குபவர்கள், மோகன்லால் மற்றும் மம்முட்டி. ரசிகர்களை திருப்திபடுத்தும் விதமாக நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதிலும், இயக்குனர்களின் பணியில் தலையிடாமல் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றுவதிலும் மம்முட்டி மற்றும் மோகன்லால் இருவரும் திறன் படைத்தவர்கள். இதனால், இவர்கள் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறும் போது அவை மிக பெரிய வெற்றியாகவும் பிற மொழி தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அவற்றின் உரிமத்தை வாங்கி தங்கள் மொழிகளில் எடுக்க விரும்புவதும் தொடர்கதையாகி வருகிறது.
1980-ல் வில்லனாக அறிமுகமாகி, இணை ஹீரோவாக பல படங்களில் நடித்து, பின் கதாநாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்து பல வெற்றிப்படங்களை தந்து கொண்டிருப்பவர் மோகன்லால்.
ஜீது ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் 2013ல் மலையாளத்தில் வெளி வந்து வசூலில் சக்கை போடு போட்ட "த்ரிஷ்யம்", தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு அந்தந்த மொழிகளில் வசூலை அள்ளி குவித்தது.
2021ல் இதே போல் இவர்கள் இணைந்து உருவாக்கிய "த்ரிஷ்யம் 2" திரைப்படமும் வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இந்த வெற்றி கூட்டணியில் உருவாகியுள்ள "நெரு" திரைப்படம் 21 அன்று ரிலீஸ் ஆகிறது.
"எனது படங்களின் வெற்றி ஒரு கூட்டு முயற்சி. அதில் எனது தனிப்பட்ட பங்கு என எதுவும் இல்லை. எதிர்மறை விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதே இல்லை. விமர்சனங்களால் எனது நீண்ட 46-ஆண்டு கால திரைப்பயணத்தை பின்னுக்கு தள்ளி விட முடியாது" என விமர்சனங்களை குறித்து மோகன்லால் கருத்து தெரிவித்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மோகன்லால் தோன்றுவதால் இப்படம் அவரது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.