23 அறுவை சிகிச்சை...3 ஆண்டு வீல்சேரில்...தற்போது தென்னிந்தியாவில் மிகப்பெரிய நடிகர்
சிறு வயதிலிருந்தே நடிகராக வேண்டும் என்ற ஆர்வம் தற்போது தேசிய விருது பெற்ற நடிகராக மாற்றியுள்ளது.
சென்னை,
சிறு வயதிலிருந்தே நடிகராக வேண்டும் என்ற ஆர்வம் தற்போது தேசிய விருது பெற்ற நடிகராக மாற்றியுள்ளது. அது வேறு யாரும் இல்லை தற்போது வெற்றிகரமான நடிகரும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களிலும் வாழும் விக்ரம்.
விக்ரம் 1966-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ம் தேதி பிறந்தார். விக்ரம் ஏற்காட்டில் உள்ள மான்ட்போர்ட் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார். பின்னர் திரைப்படத்தில் சேர விரும்பி இருக்கிறார். ஆனால், அவரது தந்தை அவரை கல்வியைத் தொடர கூறியதால் சென்னை லயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார்.
அதன்பிறகு, 1990ம் ஆண்டு 'என் காதல் கண்மணி' படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார் விக்ரம். இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் ஒரு சில மலையாள படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்தார்.
பின்னர், 2003ல் இவரது நடிப்பில் வெளிவந்த 'பிதாமகன்' திரைப்படம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. தனது நடிப்புக்காக தேசிய விருது உட்பட பல விருதுகளை விக்ரம் வென்றுள்ளார்.
தில் (2001), ஜெமினி (2002), தூள் (2003), சாமி (2003), அந்நியன் (2005), ராவணன் (2010), தெய்வத் திருமகள் (2011) இருமுகன் (2017), மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் இவரது சிறந்த படமாகும்.
விக்ரமுக்கு 12 வயதாக இருந்தபோது, ஒரு பயங்கரமான மோட்டார் பைக் விபத்தில் சிக்கினார். இதில், அவர் தனது காலை கிட்டத்தட்ட இழந்திருப்பார். தனது காலை காப்பாற்ற 23 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். இதனால், அவர் மூன்று வருடங்கள் வீல்சேரில் வாழ்க்கையை கழித்துள்ளார்.
விக்ரம் தற்போது 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.