லியோ வெற்றி விழா: காவல்துறை அனுமதி - "நா ரெடிதான் வரவா" கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்...!
நடிகர் விஜய்யின் லியோ திரைப்பட வெற்றி விழாவிற்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக மகத்தான சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள "நா ரெடிதான் வரவா" பாடல் பிரபலமானது.
லியோ படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் முதல் 4 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகக் கூறப்பட்டது. மேலும் 7 நாளில் உலகம் முழுவதும் 461 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாகப் படக்குழு அறிவித்தது.
இந்த வெற்றியைக் கொண்டாட, வருகிற 1 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்ட விழா நடத்த படக்குழு திட்டமிட்டு, இது தொடர்பாக பெரியமேடு காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் லலித் குமார், பாதுகாப்புக்கு அனுமதி கேட்டு மனு கொடுத்திருந்தார். இந்த விழாவில் விஜய்யும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கடிதத்திற்கு போலீஸ் தரப்பில், விழாவில் முக்கிய பிரபலங்கள் யார் யார் கலந்து கொள்கிறார்கள், மொத்தம் எத்தனை நபர்கள் வருகிறார்கள் எனப் பல்வேறு கேள்விகள் எழுப்பி பதில் கடிதம் அனுப்பியது. பின்பு பாதுகாப்புக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் லியோ வெற்றிவிழாவுக்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 200 - 300 கார்களுக்கு மட்டுமே உள்ளே வர அனுமதித்தும், பேருந்துகளில் வர அனுமதி மறுக்கப்பட்டு, அனுமதித்த எண்ணிக்கையின் அடிப்படையிலே டிக்கெட்டுகளை விற்பனை செய்ய வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. மேலும் நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று மாலை காவல்துறை சார்பில் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விழா நடைபெறும் இடம் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு சொந்தமானது என்பதால் தடையில்லா சான்றிதழ் மட்டுமே தேவைப்படுகிறது.