பழம்பெரும் நடிகரும் இயக்குனருமான ரா.சங்கரன் காலமானார்
ரா.சங்கரன், மௌனராகம் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக நடித்து பிரபலமடைந்தார்.
சென்னை,
பழம்பெரும் நடிகரும், இயக்குனருமான ரா.சங்கரன் (வயது 92) வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.
இவர் 1974ம் ஆண்டு நடிகர் சிவகுமார் நடிப்பில் வெளியான 'ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து தேன் சிந்துதே வானம், துர்கா தேவி, தூண்டில் மீன், வேலும் மயிலும் துணை, குமரிப்பெண்ணின் உள்ளத்திலே போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கினார்.
மேலும் இவர், புதுமை பெண், மௌனராகம், ஒரு கைதியின் டைரி, சின்ன கவுண்டர், அரண்மனை காவலன், காதல் கோட்டை உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மௌனராகம் படத்தில் நடிகை ரேவதியின் தந்தையாக நடித்து பிரபலமடைந்தார். அந்த படத்தில் நடிகர் கார்த்திக் இவரை மிஸ்டர் சந்திரமவுலி என்று அழைக்கும் அந்த காட்சிகள் ரசிகர்களிடையே பிரபலமானது.
1999ம் ஆண்டுக்கு பிறகு படங்களில் நடிக்காமல் சினிமாவில் இருந்து விலகி இருந்த ரா.சங்கரன் இன்று வயது மூப்பு காரணமாக சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். அவரின் மறைவுக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் பாரதிராஜா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சங்கரனுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவர் அந்த பதிவில், 'எனது ஆசிரியர் இயக்குனர் திரு.ரா.சங்கரன் சார் அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.