சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்திருந்தால் பாடகர் கேகே உயிர் பிழைத்திருப்பார் - உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர் தகவல்
மும்பையில் உள்ள வெர்சோவா தகன மையத்தில் கே.கே-வின் உடல் இன்று மதியம் 1 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.
கொல்கத்தா,
பிரபல பின்னணிப் பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் ( வயது 53) மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்த அவர், உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து, அவரது உடல், உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த பிரேதப் பரிசோதனை வீடியோ எடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவின்படி, கிட்டத்தட்ட மூன்று மணி நேர மேடை நிகழ்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே பாடகர் கே.கே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அவர் தனது கை மற்றும் தோள்களில் வலியை அனுபவிப்பதாக தொலைபேசி உரையாடலின் போது தனது மனைவியிடம் கூறியிருக்கிறார். அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்து பல ஆன்டாக்சிட் மாத்திரைகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அவருடைய உடலை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர் தெரிவித்ததாவது:-
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, பாடகர் கேகே மேடையில் படு உற்சாகமாக, அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். சில சமயங்களில் கூட்டத்துடன் நடனமாடினார். இது அதிகப்படியான உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனால் இதயத் தடுப்புக்கு செல்லும் இரத்த ஓட்டம் நிறுத்தப்பட்டது.
அதிகப்படியான உற்சாகம் சில நிமிடங்களுக்கு இரத்த ஓட்டத்தை நிறுத்தியதன் விளைவாக, மிகக் குறுகிய காலத்திற்கு சீரற்ற முறையில் இதயத் துடிப்பு இருந்துள்ளது. உடனே, மாரடைப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக, கேகே மயங்கி விழுந்தார்.
பாடகருக்கு இடது பிரதான கரோனரி ஆர்டரியில் 80 சதவீதம் அடைப்பு இருந்தது மற்றும் பல்வேறு ஆர்டரிகளில் சிறிய அளவிலான அடைப்பு இருந்தது. அவருக்கு இடது பிரதான கரோனரி தமனியில் பெரிய அடைப்பும், பல்வேறு தமனிகளில் சிறிய அடைப்பும் இருந்தது. லைவ் ஷோவின் போது அதிகமான உற்சாகம் காரணமாக இரத்த ஓட்டம் தடைப்பட்டு மாரடைப்பு ஏற்பட்டது.
அவர் மயங்கி விழுந்த உடனேயே இதய நுரையீரல் மறுமலர்ச்சி சிகிச்சை (சிபிஆர்) வழங்கியிருந்தால் அவர் காப்பாற்றப்பட்டிருக்கலாம். பாடகருக்கு நீண்டகாலமாகவே, இதய பிரச்சினை இருந்துள்ளது. ஆனால், அதனை கவனிக்காமல் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் அவர் இருந்தது இப்போது அவர் உயிரை பறிக்கும் அளவுக்கு மோசமாக மாறிவிட்டது.
மறைந்த பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்திற்கு, இதயத்தின் பல பகுதிகளிலும் அடைப்புகள் இருந்தன. சரியான நேரத்தில் சிபிஆர் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் கூறினார்.
நேற்று கொல்கத்தாவில் உள்ள ரபீந்திர சதனில் வைக்கப்பட்டு இருந்த பாடகர் கே.கே.வின் உடல். கே.கே. உடலுக்கு மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேரில் அஞ்சலி செலுத்தினார். கே. கே உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து அவரின் உடல் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் மும்பையில் உள்ள வெர்சோவா தகன மையத்தில் கே.கே-வின் உடல் இன்று மதியம் 1 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.