ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் 'காந்தாரா- 2'.... பிரமாண்டமாக தயாராகும் தெய்வத்தின் பின்னணி...!
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான ‘காந்தாரா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது.
சென்னை,
கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் 'காந்தாரா' டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளியது.
ரூ.8 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' திரைப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தொடர்ச்சியாக (Sequel) இல்லாமல், காந்தாராவின் அறிமுகமாக (Prequel) உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். அதன்படி பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பிறகு ரிஷப் ஷெட்டி படத்தின் கதையை எழுதி முடித்துள்ளார்.
இந்நிலையில், இந்த படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிபி 301 – 400 காலகட்டத்தில் நடைபெறுவது போன்ற கதைக்களத்தில் இந்த படம் உருவாக உள்ளது. இதற்கிடையே இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 27-ம் தேதி பூஜையுடன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்தில் காந்தாரா தெய்வத்தின் அறிமுகம் மற்றும் அதன் பின்னணி குறித்து இடம்பெறும் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.