நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டனம்
சித்தார்த்தை தொந்தரவு செய்வதை ஏற்க முடியாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி', 'சிந்துபாத்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள திரைப்படம் 'சித்தா'. இந்த படத்தை நடிகர் சித்தார்த் தன்னுடைய இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இன்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் 'சித்தா' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சித்தார்த் பெங்களூரு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த கன்னட அமைப்பினர் இந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்பினர், தமிழ்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழ் நடிகரான சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கன்னட அமைப்பினரின் எதிர்ப்பைத் தொடர்ந்து மேடையில் இருந்து நடிகர் சித்தார்த் வெளியேறினார். இதையடுத்து அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் சித்தார்த்தை தொந்தரவு செய்வதை ஏற்க முடியாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "நீண்ட காலமாக இருக்கும் பிரச்சனையை தீர்க்காமல் வைத்திருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும், மத்திய அரசை தலையிட வைக்க அழுத்தம் கொடுக்காத எம்.பி.க்களையும் கேட்பதற்கு பதிலாக, சாதாரண மக்களையும் , சித்தார்த் போன்ற கலைஞர்களையும் தொந்தரவு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு கன்னடராக அனைத்து கன்னட மக்களின் சார்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று அதில் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.