''உடம்ப நல்லா பாத்துக்க சொல்லுங்க' - இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனுக்கு ஆறுதல் கூறிய கமல்ஹாசன்


உடம்ப நல்லா பாத்துக்க சொல்லுங்க - இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனுக்கு ஆறுதல் கூறிய கமல்ஹாசன்
x

ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனுக்கு நடிகர் கமல்ஹாசன் ஆறுதல் கூறியுள்ளார்.

சென்னை,

'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான 'பிரேமம்' திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான கோல்டு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் தோல்விக்கு காரணம் அல்போன்ஸ் புத்திரன்தான் என்று ரசிகர்கள் பலர் விமர்சித்து இருந்தனர்.

இந்நிலையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது, இதனால் சினிமாவில் இருந்து விலகுகிறேன்' என்று பதிவிட்டிருந்தார். ஆனால் அந்த பதிவை சிறிது நேரத்திலேயே நீக்கினார். இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.

இதற்கிடையே நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரம் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினர். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஒரு பாடலை பாடி ஆடியோவாக உருவாக்கி இருந்தார். அந்த ஆடியோவை இயக்குனர் பார்த்திபனின் உதவியுடன் கமல்ஹாசனுக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் இயக்குனர் பார்த்திபன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு ஆடியோவை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் அல்போன்ஸ் புத்திரனின் பாடலுக்கு கமல்ஹாசன் பதிலுக்கு ஒரு ஆடியோ செய்தி அனுப்பியுள்ளார் என்று தெரிவித்திருந்தார்.

அந்த ஆடியோவில் கமல்ஹாசன், 'நான் அல்போன்ஸ் புத்திரனின் பாடலை கேட்டேன். அவரின் உடலில் சுகமில்லை என்றாலும், மனசு நன்றாக இருக்கிறது. அவரின் குரலில் சந்தோஷம் தெரிகிறது. அப்படியே அவர் சந்தோசமாக இருக்கட்டும்,வாழ்த்துக்கள். அவர் எடுத்த முடிவு அவருடையது என்றாலும் அவரின் உடம்பை நன்றாக பார்த்துக்கொள்ள சொல்லுங்கள். டேக் கேர் அல்போன்ஸ் புத்திரன்' என்று தெரிவித்துள்ளார்.


Next Story