அமிதாப் பச்சன் எவ்வாறு அஸ்வத்தாமாவாக மாறினார் என்பதை பகிர்ந்த ஒப்பனை கலைஞர்
'கல்கி 2898 ஏடி' படத்தில் அமிதாப்பச்சன் அஸ்வத்தாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்
சென்னை,
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்து வெளியான படம், 'கல்கி 2898 ஏடி'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷாபதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தில் அமிதாப்பச்சன் அஸ்வத்தாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரது தோற்றம் வெளியாகி மிகவும் பேசுபொருளானது. இந்நிலையில், அமிதாப் பச்சன் எவ்வாறு அஸ்வத்தாமாவாக மாறினார் என்பது குறித்து பிரபல ஒப்பனை கலைஞர் பிரீதிஷீல் சிங் கூறுகையில்,
'அமிதாப்பச்சனுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. அஸ்வத்தாமா மிகவும் சுவாரஸ்யமான பாத்திரம் என்பதால் இந்த பணி சுவாரஸ்யமாக இருந்தது. அவர் எப்படி இருக்க வேண்டும் என்று படக்குழு என்னிடம் தெளிவாக தெரிவித்தது. அதன்படி, அவரை நாங்கள் தோற்றப்படுத்தினோம். அதன்படி, அவரை மிகவும் வயதான தோற்றத்திலும் அவரை சுற்றி அனைத்தும் இருளாகவும் உருவாக்கினோம்.
நீங்கள் அவரின் நெற்றியில் ஒரு கல் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அது இயற்கையாக இருக்க வேண்டும் அதே சமயம் நெற்றியில் நாங்கள் பொருத்திய சாதனத்துடன் தடையின்றி இணைக்க வேண்டும் என்பதற்காக அதற்கு சரியாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட கல்லை பயன்படுத்தினோம், 'என்றார்.
மேலும், 'கல்கி 2898 ஏடி' கட்டுக்கதை மற்றும் யதார்த்தத்தின் இணைப்பில் உருவான ஒரு மகத்தான படம் என்று அமிதாப்பச்சன் தெரிவித்திருந்தார்.