'ஜெய்பீம் படத்தின் நோக்கம் முழுமையடைந்துள்ளது' - தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த சூர்யா..!
'ஜெய்பீம்' திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நடிகர் சூர்யா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த 'ஜெய்பீம்' திரைப்படம், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. உலகம் முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்த திரைப்படம், 94-வது ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைபட்டியலிலும் இடம்பிடித்தது.
சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட 'ஜெய்பீம்' திரைப்படம், ஒரு சில காரணங்களால் சர்ச்சைகளில் சிக்கியது. படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதற்கேற்ப படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனிடையே நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் 'ஜெய்பீம்' திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, 'ஜெய்பீம்' படத்தின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், 'ஜெய்பீம் திரைப்படம் வெளியான இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு படைப்பிற்கான சிறந்த அங்கீகாரம். நல்முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
திரைப்படம் வெளியான பிறகு தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு, கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமை அடைய செய்த தமிழ்நாடு முதல்வருக்கும், அரசுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்' என்று பதிவிட்டுள்ளார்.