ஆட்சியாளர்களுக்கு கல்வி அவசியமா? - நடிகை கஜோலின் பேச்சால் எழுந்த சர்ச்சை
அரசியல் தலைவர்களை இழிவுபடுத்துவது தனது நோக்கமல்ல என்று நடிகை கஜோல் தெரிவித்துள்ளார்.
மும்பை,
இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை கஜோல். இவர் தற்போது 'தி டிரையல்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் குறித்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பேட்டியளித்த போது நடிகை கஜோல் கூறிய சில கருத்துக்கள் இணையத்தில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசிய நடிகை கஜோல், "இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில் மாற்றங்கள் மிக, மிக மெதுவாகவே நிகழ்கின்றன. ஏனென்றால், நாம் நமது பாரம்பரியத்திலும், நமது சிந்தனை செயல்முறைகளிலும் மூழ்கியிருக்கிறோம். நிச்சயமாக இதற்கும், கல்விக்கும் ஒரு தொடர்பு உள்ளது.
கல்வி பின்னணி இல்லாத அரசியல் தலைவர்கள் நம்மிடம் உள்ளனர். இதை சொல்வதற்காக மன்னிக்கவும். கல்வி நமக்கு மாறுபட்ட கண்ணோட்டத்தில் சிந்திப்பதற்கான வாய்ப்பைத் தரும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அத்தகைய கண்ணோட்டம் இல்லாத பல தலைவர்களால் நான் ஆளப்பட்டிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
அவரது இந்த கருத்துக்கு டுவிட்டரில் பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். கல்வி பின்னணி இல்லாத பல அரசியல் தலைவர்கள் நாட்டில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர் என்று ஒரு தரப்பினரும், கல்வி அறிவு குறித்து கஜோல் கூறியது சரியான கருத்து தான் என்று மற்றொரு தரப்பினரும் வாதிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தனது பேச்சு குறித்து நடிகை கஜோல் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நான் கல்வி மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு கருத்தை மட்டுமே தெரிவித்தேன். எனது நோக்கம் எந்த அரசியல் தலைவர்களையும் இழிவுபடுத்துவது அல்ல. நாட்டை சரியான பாதையில் வழிநடத்தும் சில சிறந்த தலைவர்கள் நம்மிடம் உள்ளனர்" என்று கஜோல் பதிவிட்டுள்ளார்.