இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கைது செய்யவும் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது
புதுடெல்லி,
பிரபல ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை தான் இயக்கிய, 'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டார். அந்த போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. கனடாவில் வெளியிடப்பட்ட இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் போஸ்டர் வெளியிட்ட லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டனர். லீனா மணிமேகலை மீதான புகாரின் அடிப்படையில் டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்யக்கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, லீனா மணிமேகலையை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறும் அவரது தயாரிப்பு நிறுவனமான டூரிங் டாக்கீஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்டும் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்குகளுக்கு எதிராக லீனா மணிமேகலை சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த வழக்குகளால் தான் கைது செய்யக்கூடும் என்றும் தனக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. லீனாவின் வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு , அவருடைய மனு தொடர்பான வாதத்தை விளக்கமளிக்க மத்திய அரசு, டெல்லி, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேச மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கைது செய்யவும் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது