டைரக்டர் ராஜமவுலியின் மதம் சார்ந்த கருத்து - நடிகை கங்கனா ரனாவத் பதில்
ராஜமவுலியின் மதம் குறித்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மும்பை
பிரபல டைரக்டர் ராஜமவுலி 'தி நியூயார்க்கர்' பத்திரிகைக்கு நீண்ட பேட்டியளித்துள்ளார்.அதில் அவர் கூறி இருப்பதாவது:-
எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை. ஆனால் என்னுடைய கருத்தை படத்தில் திணிக்க விரும்பமாட்டேன். சினிமா வணிக ரீதியிலானது. மக்கள் விரும்புகிறார்கள் அதனால் அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். அது என் வேலை அவ்வளவே. நான் கடவுள் நம்பிக்கையற்றவன். இதனால் என்னை எனது தந்தைக்கூட திட்டியுள்ளார். ஆனால் தற்போது நான் வாழும் வாழ்க்கை முறையை பார்த்து நிம்மதியாக இருக்கிறார்.
எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள். நான் சிறுவயதில் உள்ளபோது இந்து கடவுள்கள் குறித்து படிக்கும்போது நம்பும்படியாக தெரியவில்லை. பிறகு எனது குடும்பத்தின் தீவிரமான போக்கினால் மதம் குறித்த நூல்கள் படித்தேன். யாத்திரை சென்றுள்ளேன்.
சன்னியாசி போல் உடையணிந்து சில வருடங்கள் வாழ்ந்துள்ளேன். சில நண்பர்களால் கிறிஸ்துவத்தையும் அறிந்தேன். பைபிள் படித்துள்ளேன். பிறகு மெல்ல மெல்ல இதெல்லாம் எனக்கு மதம் என்பது சுரண்டல் தன்மையுடையது என உணர்த்தியது.
பிறகு அயன் ராண்டின் புத்தகங்கள் படித்துள்ளேன். அது என்னை வெகுவாக பாதித்தது. அந்த நேரத்தில்தான் நான் மதத்தினை விட்டு வெளியேற ஆரம்பித்தேன் என நினைக்கிறேன். ஆனாலும் அப்போதும் ராமாயணம், மகாபாரதம் கதைகள் மீதான எனது காதல் குறையவில்லை.
மதம் ரீதியில் அதை அணுகாமால், கதை சொல்லல் முறை அந்த கதை எழுதப்பட்டிருக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என கூறி உள்ளார்.
ராஜமவுலியின் மதம் குறித்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்த கங்கனா கூறியதாவது: -
உலகம் அவர் மீது விமர்சனம் வைக்கும் அளவுக்கு அவர் என்ன செய்துவிட்டார்?தயவு செய்து சொல்லுங்கள். நமது தொலைந்து போன நாகரீகத்தை பாகுபலி படமாக எடுத்ததற்காவா? அல்லது ஆர்ஆர்ஆர் போன்ற தேசியவாத படத்தினை எடுத்ததற்காவா? சர்வதேச சிவப்பு கம்பள வரவேற்பில் வேஷ்டி சட்டை அணிந்ததற்காவா?
அவர் என்ன தவறு செய்தார் தெரியும். அவர் இந்த நாட்டினை காதலிக்கிறார். உள்ளூர் சினிமாவை உலக சினிமாவிற்கு கொண்டு சென்றார். அவர் இந்த நாட்டிற்கு அர்பணிப்புடன் இருந்துள்ளார். அதுதான் அவர் செய்த தவறு. ஆனால் எவ்வளவு தைரியம் இருந்தால் இந்த நாட்டிலுள்ளவர்கள் அவரது நேர்மையை கேள்வி கேட்கலாம்? உங்களுக்கு அசிங்கமாக இல்லையா என கூறி உள்ளார்.