இந்திராகாந்தி வந்தார்
5.9.1972 அன்று அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி தூத்துக்குடிக்கு வருகை தந்தார். வ.உ.சி. கல்லூரி வெள்ளி விழாவில் பங்கேற்ற அவர், அன்று மாலையில் சினிமா கொட்டகை, இந்திராகாந்தி, தூத்துக்குடி, சார்லஸ் தியேட்டர் நடந்த இ.காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் உரையாற்றினார்.
தற்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் கதிர்வேல் அப்போது அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த அனுபவம் குறித்து அவர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
"காங்கிரஸ் கட்சியானது ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என்று இரண்டாக பிரிந்து இருந்த சமயம். தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலானவர்கள் காமராஜரின் தலைமையை ஏற்று ஸ்தாபன காங்கிரசில் இருந்தனர். தமிழ்நாடு இ.காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஏ.பி.சி.வீரபாகு இருந்தார். நகர இ.காங்கிரஸ் தலைவராக குழந்தை என்பவர் இருந்தார். நான் உதவித் தலைவராக இருந்தேன். அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் நடந்த விழாவில் பிரதமர் இந்திராகாந்தி, முதல்-அமைச்சர் கருணாநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கருணாநிதி பேசும்போது கூட்டத்தில் செருப்பு வீச்சு சம்பவம் நடந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கூட்டத்தை முடித்த பிறகு பிரதமர் இந்திரா காந்தி மாலையில் சார்லஸ் தியேட்டரில் நடந்த இ.காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்தார்.
அந்த ஊழியர் கூட்டம் ஸ்தாபன காங்கிரசுக்கும், காமராஜருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்டது. தூத்துக்குடியில் இந்திரா காங்கிரசின் பலத்தை நிரூபிக்கும் வகையிலும், காங்கிரசாரை ஒருங்கிணைக்கும் வகையிலும் அந்தக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க இந்திரா காந்தி வந்தார். தியேட்டர் முன்பு அவருக்கு சேவாதள தொண்டர்களின் எழுச்சிமிகு அணிவகுப்பு நடந்தது. அதனை உற்சாகமாக ஏற்றுக்கொண்ட பிரதமர், ஊழியர் கூட்ட அரங்கிற்கு வந்தார். அவர் மிகவும் எளிமையாக இருந்தார். அவரை பார்த்ததும் காங்கிரசார் கைகளைத் தட்டியும், வாழ்த்து கோஷங்களை எழுப்பியும் ஆரவாரம் செய்தனர். கூட்டத்தில் அனைவரும் தலா 5 நிமிடங்கள் மட்டுமே பேசினர். அதன்பிறகு பிரதமர் இந்திராகாந்தி காங்கிரஸ் நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி பேசினார். அப்போது, காமராஜர் முக்கிய நிர்வாகிகளுடன் சேர்ந்து சிண்டிகேட் அமைத்து செயல்படுவதாக குற்றம்சாட்டினார்"
இவ்வாறு கடந்த நிகழ்வுகளை கதிர்வேல் நினைவு கூர்ந்தார்.