இந்திய தேசிய கொடி அவமதிப்பு: உக்ரைன் பாடகி மீது வழக்கு
உமா சாந்தி தனது இரு கைகளிலும் இந்திய தேசிய கொடியை ஏந்தியபடி மேடையில் நடனம் ஆடினார்
உக்ரைனை சேர்ந்த பிரபல சாந்தி பீப்பிள்ஸ் இசைக்குழுவில் முன்னணி பாடகியாக இருப்பவர் உமா சாந்தி. தற்போது இந்த குழுவினர் இந்தியாவில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு, போபாலில் இசை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மராட்டிய மாநிலம் புனே முந்த்வாவில் உள்ள ஒரு கிளப்பில் இசை நிகழ்ச்சியை நடத்தினர். இதில் உமா சாந்தி பங்கேற்று பாடல்கள் பாடினார். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று ரசித்தனர்.
உமா சாந்தி தனது இரு கைகளிலும் இந்திய தேசிய கொடியை ஏந்தியபடி மேடையில் நடனம் ஆடினார். திடீரென்று கையில் இருந்த தேசிய கொடிகளை பார்வையாளர்களை நோக்கி வீசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்திய தேசிய கொடியை அவமதித்து விட்டதாக எதிர்ப்புகளும் கண்டனங்களும் கிளம்பின. கோரேகான் பார்க் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து உமா சாந்தி மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர் கார்த்திக் மெரீன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருப்பதாக போலீஸ் அதிகாரி தெரிவித்து உள்ளார்.