குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன் - ஏ.ஆர். ரகுமான்
மக்கள் அனைவரும் விழித்துக்கொள்ள இன்று நானே பலிகடா ஆகிறேன் என ஏ.ஆர். ரகுமான் வேதனையுடன் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி நேற்று (செப்.10) நடைபெற்றது. இதற்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோல்டு, பிளாட்டினம், சில்வர் என டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பியதாக குற்றம்சாட்டியுள்ளனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிந்ததால் பலருக்கும் மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் விமர்சித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்ஸ்டா பதிவில் கூறியிருப்பதாவது:-
இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன். நேற்று நடந்த சம்பவங்களால் நான் மிகவும் வேதனையடைந்தேன். கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு ஏற்றபடி வரும் காலங்களில் சென்னை மாநகரில் உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மக்கள் அனைவரும் விழித்துக்கொள்ள, இன்று நானே பலிகடா ஆகிறேன் என பதிவிட்டுள்ளார்.