ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன்
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன், ஜனநாயகத்தின் மூலம் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள் என ஜனநாயகத்தின் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை தனது வாக்கினை செலுத்தியபின், பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்ரீனிவாசன், "சாக்ரடீஸ் தற்போது உயிருடன் இருந்தால், ஜனநாயகத்தை உருவாக்கியவரை கொலை செய்துவிட்டு தானும் விஷம் குடித்து இறந்திருப்பார். இப்போது, நமக்கான நியாயம் நமக்கே எதிராக உள்ளது. அடிப்படையில் நான் இந்த ஜனநாயக அமைப்பையே எதிர்க்கிறேன்.
நமது ஜனநாயகத்தில் தன்னுடைய பொறுப்பைத் தட்டிக்கழிக்க ஒவ்வொரு திருடனும் வழிகளை தெரிந்து வைத்துள்ளான். ஜனநாயகத்தின் தொடக்கம் கிரேக்கத்தில் உருவானது. நம்மை விட சிறந்த அறிவாளராக கருதப்படும் சாக்ரடீஸே நல்ல திறமையாளர்களுக்கு வாக்களிக்கப் பரிந்துரைத்தார். ஆனால் நாம் வாக்களிப்பவர்கள் அத்தகைய திறமையாளர்களா என்ன?" என்றார்.
மேலும்,"துரதிஷ்டவசமாக இந்தியா முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வதாகத் தெரியவில்லை. நான் நமது ஜனநாயக முறை பற்றி விமர்சிக்கையில் துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவர் அமைப்பில்லாமல் ஒரு நாடு எப்படி இயங்கமுடியும் என்று கேட்டார். வெளிநாட்டில் வசிப்பவருக்கு இதுபோன்ற கருத்தை சொல்லவே தகுதியில்லை என்று நான் நினைக்கிறேன்" எனக் கூறினார்.