'எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு உள்ளது' - பிரேமம் இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!


எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு உள்ளது - பிரேமம் இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!
x

தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு கண்டறியப்பட்டு உள்ளதால் இனி படங்கள் இயக்கப்போவது இல்லை என்று இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான'பிரேமம்' திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான கோல்டு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் தோல்விக்கு காரணம் அல்போன்ஸ் புத்திரன்தான் என்று ரசிகர்கள் பலர் விமர்சித்து இருந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், தான் இயக்கும் புதிய படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். அதற்கு ரசிகர்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துவந்தனர்.

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனின் இன்ஸ்டாகிராம் பதிவு

இந்நிலையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில் 'நான் சினிமா படங்களை இனி இயக்க போவதில்லை, எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பது நேற்று உறுதியாகி உள்ளது. நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை' என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் 'நான் தொடர்ந்து பாடல் வீடியோக்கள், குறும்படங்களை இயக்கி ஓடிடியில் வெளியிட முயற்சிக்கிறேன். ஏனென்றால் சினிமாவில் இருந்து விலக நான் விரும்பவில்லை. என்னால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நான் கொடுக்க விரும்பவில்லை. உடல்நலம் பலவீனமாக இருக்கும்போது வாழ்க்கை எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது' என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து, அந்த பதிவை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் அவர் தற்போது அந்த பதிவை நீக்கியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story