'அவரை பற்றி பேச எனக்கு தகுதி இல்லை' - நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து பாலா கருத்து


அவரை பற்றி பேச எனக்கு தகுதி இல்லை - நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து பாலா கருத்து
x

சமீபத்தில் சென்னை அனகாபுத்தூர் பகுதியில் மருத்துவத்திற்காக இலவச ஆட்டோ சேவையை தொடங்கி வைத்தார்.

சென்னை,

சின்னத்திரையில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் பாலா. இவர் ஆதரவற்ற முதியோர்கள், ஆதரவற்ற குழந்தைகள் உள்ளிட்டோருக்கான காப்பகங்கள் நடத்தி வருவதுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறார். அவர் தன்னுடைய சொந்த செலவில் மலை கிராம மக்களுக்கு 4 இலவச ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்திருக்கிறார்.

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சுமாா் 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 கொடுத்து உதவினார். சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டம் கோட்டை கயப்பாக்கம் என்ற கிராமத்தில் ரூ.3 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து கொடுத்துள்ளார். சமீபத்தில் சென்னை அனகாபுத்தூர் பகுதியில் மருத்துவத்திற்காக இலவச ஆட்டோ சேவையை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து நடிகர் பாலா கருத்து தெரிவித்து உள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'மற்றவர்களுக்கு தொடர்ந்து நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஆம்புலஸ்களை வாங்கி கொடுத்திருக்கிறேன். நான் 10 ஆம்புலன்ஸ்கள் வாங்கி தருவதாக கூறினேன். இதுவரை 5 ஆம்புலன்ஸ்கள் வாங்கியிருக்கிறேன். மீதம் இருக்கும் ஐந்தையும் விரைவில் வாங்கித் தருவேன்.

நடிகர் விஜய் எதை செய்தாலும் யோசித்துதான் செய்வார். விஜய் சார் பற்றி பேசுவதற்கு எனக்கு தகுதி இல்லை. அரசியலில் சேரும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. எனக்கு பதவி ஆசை இல்லை. அந்த அளவிற்கு மூளையும் இல்லை. எனக்கு சேவை மட்டும் போதும். அரசியலில் தாக்கு பிடிக்கும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லை. நான் செய்வதில் எந்த விதமான அரசியல் நோக்கம் கிடையாது, அன்பின் ஏக்கம் மட்டுமே இருக்கிறது' என்று தெரிவித்தார்.


Next Story