ஹீரோயின்கள்தான் படவாய்ப்பு தருகிறார்கள், ஹீரோக்கள் கதை கேட்பதில்லை - இயக்குநர் கோபி நயினார்
சினிமாவில் நல்ல கதைகளை கொண்டு நல்ல படங்களை இயக்குபவர்களை ஹீரோக்கள் அழைத்து கதை கேட்பதில்லை. ஹீரோயின்கள்தான் படவாய்ப்பு தருகிறார்கள் என்று பிரபல இயக்குநர் கோபி நயினார் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
விஜய் நடித்த கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று கூறி போராடியவர் கோபி நயினார். அதன் பிறகு அறம் படம் மூலம் கவனம் ஈர்த்தார். முதல் படமே அட்டகாசமாக இருந்ததால் கோபி நயினார் நம்பிக்கைக்குரிய இயக்குநர் என்ற பெயரையும் பெற்றார். இப்போது அவர் ஆண்ட்ரியாவை வைத்து மனுசி படத்தை இயக்கியிருக்கிறார். இதன் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. வசனங்கள் அனைத்துமே சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டுவருகின்றன.
தமிழ் சினிமாவில் அறம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கோபி நயினார். நயன்தாரா நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டானது. குறிப்பாக நடிகையை மையமாக வைத்து படம் எடுத்தும் பெரிய ஹிட்டை கொடுக்கலாம் என்ற டெம்ப்ளேட்டை கோபி நயினார் உருவாக்கினார். அந்தப் படத்திலிருந்து நயன் மீதான மதிப்பு ரசிகர்களிடம் அதிகளவு உயர்ந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் கத்தி. ஆனால் கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று பெரிய சட்டப்போராட்டமே கோபி நயினார் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் அறம் படத்துக்கு பிறகு அவர் ஜெய்யை வைத்து கருப்பர் நகரம் என்ற படத்தை இயக்கவும் கமிட்டாகியிருக்கிறார். இந்தப் படம் வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. கோபி நயினார் இயக்கம் என்பதால் கண்டிப்பாக இதில் வடசென்னையின் அசல் முகங்களையும் , வாழ்வியலையும் பார்க்கலாம் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே இருக்கிறது. இதற்கிடையே அவர் இப்போது ஆண்ட்ரியாவை வைத்து மனுசி படத்தை இயக்கியிருக்கிறார். இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. படத்தில் ஆண்ட்ரியாவுடன் நாசர், பாலாஜி சக்திவேல், தமிழரசன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் அதில் இடம்பெற்ற வசனங்களை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "முன்னணி ஹீரோக்கள் பெரும்பாலும் என்னை கண்டுகொள்வதே இல்லை. ஹீரோயின்கள்தான் மதித்து வாய்ப்பு கொடுக்கிறார்கள். சினிமாவில் நல்ல கதைகளை கொண்டு நல்ல படங்களை இயக்குபவர்களை ஹீரோக்கள் அழைத்து கதை கேட்பதில்லை. ஆனால் யாரை வளர்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும் இங்கு சினிமா இயங்கிக்கொண்டிருக்கிறது.
அறம் கதையை கேட்டதும், ஒரு குழந்தையை மீட்க இங்கே எந்தவொரு தொழில்நுட்பமுமே இல்லை என்பதை தெரிந்ததும் நயன்தாரா உடனே படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார். அதேபோல் மனுசி கதையின் மையக்கருவை புரிந்துகொண்ட ஆண்ட்ரியாவும் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார்" என்றார்.