'குடித்துவிட்டு குடும்பத்தை பற்றி அசிங்கமாக பேசுவார்' - ஷகிலாவின் வளர்ப்பு மகள் ஷீத்தல் பரபரப்பு பேட்டி
நடிகை ஷகிலா மீது அவரது வளர்ப்பு மகள் சீத்தல் தாக்குதல் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.
சென்னை,
தமிழ், மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்தவர் ஷகீலா. தற்போது குணசித்திர வேடங்களிலும் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் வசித்து வரும் ஷகீலா அவரது அண்ணன் மகள் ஷீத்தலை வளர்ப்பு மகளாக வளர்த்து வருகிறார்.
இதற்கிடையே ஷகீலாவுக்கும் ஷீத்தலுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது ஷீத்தல், ஷகீலாவை தாக்கி விட்டு சென்றுள்ளார். இதுதொடர்பாக சமாதானம் பேசுவதற்காக ஷகீலாவின் வழக்கறிஞர் சவுந்தர்யா, ஷீத்தலை வீட்டிற்கு அழைத்து உள்ளார். இதையடுத்து ஷீத்தலின் தாயார் சசி, அக்கா ஜமீலா ஆகியோர் ஷகீலாவின் வீட்டிற்கு சென்று உள்ளனர்.
அப்போது சமாதானம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது சவுந்தர்யாவை ஷீத்தல் தாக்கியுள்ளார். ஷீத்தலின் தாயார் சவுந்தர்யாவின் கையை பிடித்து கடித்து காயம் ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளார். இதுபற்றி சவுந்தர்யா கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக சீத்தல் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'எனக்கும் அத்தைக்கும் சில நாட்களாகவே பிரச்சனை இருந்தது உண்மைதான். அவர் குடித்துவிட்டு எப்போதும் என் குடும்பத்தை பற்றி அசிங்கமாக பேசுவார். எனக்கும் அவருக்கும் இடையே நிறைய வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நான் என்னுடைய அம்மாவிடம் சென்று விட்டேன். பின் என்னுடைய அத்தை அவரின் நண்பர் தங்கம் என்பவரின் மூலம் என்னை வீட்டிற்கு வர சொல்லி கட்டாயப்படுத்தினார்.
நானும் என்னை வளர்த்தவர்கள் என்ற காரணத்தினால் அவர் வீட்டிற்கு சென்றேன். அவர் என்னுடைய அம்மா மற்றும் சகோதரி குறித்தும் ரொம்ப தப்பாக பேசினார். உடனே நான், எப்படி நீங்கள் இப்படி பேசலாம் என்று சொன்னவுடன் அவர் என்னை அடித்து விட்டார். நானும் பதிலுக்கு அவரை அடித்தேன். பின் என்னுடைய அத்தையின் வழக்கறிஞர் சௌந்தர்யா வந்து மன்னிப்பு கேட்க சொன்னார். நான் மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அவர் கையில் இருந்த ஒரு பொருளை என் மீது எடுத்து அடித்தார். அதனால் தான் நான் அவரை அடித்தேன். இதையெல்லாம் என்னுடைய அத்தை உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் அடித்ததால் தான் நாங்கள் அடித்தோம் தவிர நாங்களாக யாரையும் வேண்டுமென்றே அடிக்கவில்லை. நாங்களும் மன்னிப்பு கேட்டு இந்த பிரச்சனை முடித்து விடலாம் என்று நினைத்தோம். ஆனாலும், அவர்கள் எங்கள் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள்' என்று தெரிவித்தார்.