என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்டார்... மம்முட்டி பட நடிகை குமுறல்
திரையுலகில் எல்லோரும் அவமதிப்பு ஏற்படுத்த கூடிய வகையில் நடந்து கொள்வதில்லை என்று நடிகை அஞ்சலி அமீர் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழில் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் பேரன்பு. இயக்குநர் ராம் இயக்கிய இந்த படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை அஞ்சலி அமீர். அவருடன் மலையாள பட நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு இந்த படத்தில் சேர்ந்து நடித்திருக்கிறார்.
இந்நிலையில், படப்பிடிப்பின்போது, தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை நடிகை அஞ்சலி பகிர்ந்து இருக்கிறார். திருநங்கையான அவர் அந்த சமூகத்தினர் எதிர்கொண்டு வரும் சவால்கள் மற்றும் அவர்களை பற்றிய தவறான கருத்துகள் ஆகியவற்றை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதுபற்றி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சுராஜ் என்னிடம் அசவுகரியம் ஏற்படும்படியான கேள்வி ஒன்றை கேட்டார். அவர், பெண்களுக்கு ஏற்பட கூடிய இன்பநிலை உங்களுக்கு ஏற்படுமா? என்று கேட்டார் என அழுதபடியே அந்த பேட்டியில் கூறுகிறார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, இதனால் நான் அவரை கடுமையாக எச்சரித்தேன். இந்த விவகாரம் பற்றி நடிகர் மம்முட்டியிடமும், பட இயக்குநரிடமும் கூறினேன். நான் ஒரு வலிமையான மனம் படைத்தவள். எனக்கு அவர் அந்த கேள்வியை கேட்கும்வரை வருத்தம் தரக்கூடிய எந்த அனுபவமும் ஏற்படவில்லை என்றார்.
திருநங்கை சமூக மக்கள், பெண்களை போன்றே இன்பநிலையை அடைவார்களா? என என்னை பார்த்து அவர் கேட்டார். அதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டு அவரை எச்சரித்தேன்.
இதன்பின்னர், அவர் மன்னிப்பு கேட்டு கொண்டார். அதன்பின்பு அநாகரீக வகையில் மீண்டும் என்னிடம் அவர் பேசவே இல்லை. இதனை நான் பாராட்டுகிறேன் என கூறியுள்ளார். திரையுலகில் எல்லோரும் அவமதிப்பு ஏற்படுத்த கூடிய வகையில் நடந்து கொள்வதில்லை.
பலர் மதிப்புடனும், நாகரீகத்துடனும் நடந்து கொள்கின்றனர். அதற்காக, சமரசம் செய்து கொள்ளவோ அல்லது விருப்பப்படி நடந்து கொள்ள வலியுறுத்தும் நபர்கள் இல்லையென்றோ அதற்கு அர்த்தம் இல்லை. துரதிர்ஷ்டவசத்தில் அதுபோன்ற நபர்களும் உள்ளனர் என அவர் கூறியுள்ளார்.
கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில், நடிகைகளுக்கு எதிரான துன்புறுத்தல்களை பற்றி விசாரிக்க 7 பேர் கொண்ட சிறப்பு குழு ஒன்றை முதல்-மந்திரி பினராயி விஜயன் அமைத்து உத்தரவிட்டார்.
இதுவரை, மலையாள திரையுலகில் பட இயக்குனர்கள் ரஞ்சித், துளசிதாஸ், வி.கே. பிரகாஷ் மற்றும் நடிகர்கள் சித்திக், ரியாஸ் கான், பாபுராஜ், முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, இடவேள பாபு மற்றும் தயாரிப்பு நிர்வாகிகளான நோபல், விச்சு, விளம்பர இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் உள்ளிட்ட பலர் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.