அவரே முக்கிய நபர் இல்லை... நடிகை கங்கனா பற்றிய கேள்விக்கு ஜாவித் அக்தர் பதிலடி
பாகிஸ்தான் பற்றிய தனது பேச்சை புகழ்ந்த நடிகை கங்கனா ரனாவத் பற்றிய கேள்வியையே ஜாவித் அக்தர் தவிர்த்து உள்ளார்.
புனே,
இந்தி திரையுலகில் பாடல்களை எழுதும் பழம்பெரும் பாடலாசிரியர் ஜாவித் அக்தர் (வயது 78). சமீபத்தில் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு சென்றார். அந்நாட்டில் பிரபல உருது கவிஞரான பயஸ் அகமது பயசை நினைவுகூரும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் அக்தர் கலந்து கொண்டார்.
அப்போது, அவரிடம் பார்வையாளர்கள் வரிசையில் இருந்த ஒரு நபர், நீங்கள் பாகிஸ்தானிற்கு பலமுறை வந்திருக்கிறீர்கள். திரும்பி சென்றபின்னர், உங்கள் மக்களிடம் பாகிஸ்தான் மக்கள் எவ்வளவு நல்லவர்கள் என எடுத்து கூறியதுண்டா? என கேட்டுள்ளார்.
அக்தர் முன் வைக்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதிலில், நாம் ஒருவரை ஒருவர் குறைகூறி கொண்டிருக்க வேண்டாம். அது பிரச்சனைகளுக்கு தீர்வு தராது என கூறினார்.
பின்னர் அவர், மும்பை பயங்கரவாத தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்று நாம் பார்த்தோம். அவர்கள் (பயங்கரவாதிகளை குறிப்பிட்டு) நார்வே நாட்டில் இருந்தோ அல்லது எகிப்தில் இருந்தோ வரவில்லை.
அவர்கள் உங்களுடைய நாட்டில் இன்னும் சுதந்திரமுடன் உலவி வருகின்றனர். இதுபற்றி இந்தியர்கள் புகார் தெரிவித்து உள்ளனர் என கூறினார்.
தொடர்ந்து அவர், பாகிஸ்தானிய கலைஞர்களான நஸ்ரத் பதே அலி கான் மற்றும் மெஹதி ஹாசனுக்கு இந்தியாவில் பெரிய பெரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இருக்கின்றன.
ஆனால், பிரபல இந்திய பாடகியான லதா மங்கேஷ்கருக்காக ஒரு நிகழ்ச்சியை கூட பாகிஸ்தான் ஒருபோதும் நடத்தியதில்லை என கூறினார்.
இந்தியாவில், மராட்டிய மாநிலம் மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர்.
இந்த தாக்குதலில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 18 பேர் பாதுகாப்பு அதிகாரிகள். பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இதில், பல கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளும் சேதமடைந்தன.
இந்நிலையில், அக்தரின் பதிலை நடிகை கங்கனா ரனாவத் பாராட்டி உள்ளார். இதுபற்றி கங்கனா வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவில், ஜாவித் ஐயாவின் பாடல்களை கவனிக்கும்போது, கடவுள் சரஸ்வதி அவரை ஆசீர்வதித்து உள்ளார் என்ற உணர்வு எனக்கு வரும்.
ஆனால், ஒருவர் தெய்வீக தன்மையால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்றால் அவருக்குள் சில உண்மைகள் இருக்க வேண்டும். ஜெய்ஹிந்த். அவர்களது சொந்த மண்ணில் அவர்களை பற்றிய உண்மையை அவர் தெளித்து இருக்கிறார் என பதிவிட்டார்.
அக்தரை, கங்கனா புகழ்ந்து பேசியதுபற்றி சமீபத்தில் அக்தரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்காமல் ஜாவித் அக்தர், தவிர்க்க முற்பட்டார். அவர் கூறும்போது, கங்கனாவையே நான் முக்கிய நபராக நினைக்கவில்லை. பின்னர், அவர் என்ன முக்கிய விசயம் பற்றி பேசியிருக்க முடியும்? அவரை விட்டு தள்ளுங்கள். அடுத்த விசயத்திற்கு போவோம் என பதிலாக கூறியுள்ளார்.
தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தனக்கு எதிராக அவதூறாக பேசினார் என கூறி, கடந்த 2020-ம் ஆண்டு கங்கனாவுக்கு எதிராக ஜாவித் அக்தர் புகார் பதிவு செய்து உள்ளார்.
கடந்த 55 ஆண்டுகளாக தனக்கு என நல்ல பெயரை உருவாக்கி வைத்த நிலையில், அந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி உள்ளார் என்றும் புகாரில் தெரிவித்து உள்ளார். இதுபற்றி ஜூகு போலீசார் விசாரித்து வருகின்றனர்.