அமீர்கான் மகன் நடித்த 'மஹாராஜ்' திரைப்படத்துக்கு தடைவிதிக்க வேண்டும்...இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு


அமீர்கான் மகன் நடித்த  மஹாராஜ் திரைப்படத்துக்கு தடைவிதிக்க வேண்டும்...இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு
x

'மஹாராஜ்’ படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வடமாநிலத்தில் இந்துத்துவ அமைப்பினர் தங்கள் எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர்.

பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் அமீர்கானின் மகன் ஜுனைத் கான் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் 'மஹாராஜ்'. இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் நாளை நேரடியாக வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்குதான் நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், நெட்பிளிக்ஸை புறக்கணிக்க வேண்டும் என்றும் இணையத்தில் ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்து மதத்தையும், இந்து மத குருக்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என வடமாநிலத்தில் இந்துத்துவ அமைப்பினர் தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றனர்.


கடந்த 1862ல் நடந்த மகாராஜா அவதூறு வழக்குதான் இந்தப் படத்தின் கதை என்கிறார்கள். அதாவது, ஜாதுநாத்ஜி பிரிஜ்ரத்தன்ஜி மகாராஜ் எனும் துறவியின் லீலைகளை கர்சாந்தாஸ் முல்ஜி எனும் பத்திரிகையாளர் அம்பலப்படுத்தி இருக்கிறார். இதைத்தான் 'மகாராஜ்' கதையாக படமாக்கி இருக்கிறார்கள்.

முதல் படத்திலேயே அமீர்கான் மகன் வெறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளார் என மதச்சாயத்தையும், சிலர் பூசி வருகின்றனர். அதுபோலவே, நயன்தாராவின் 'அன்னபூரணி' படத்தையும் குறிப்பிட்டு 'இதுபோல இந்து மத வெறுப்பை பரப்பும் படங்களை வெளியிடுவது நெட்பிளிக்ஸ் தளத்திற்கு புதிதல்ல' என்றும் கூறி வருகின்றனர்.

இதையடுத்து, #BoycottNetflix, #BanMaharaj என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.


Next Story