திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்


திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
x
தினத்தந்தி 2 May 2024 12:51 AM GMT (Updated: 2 May 2024 3:56 AM GMT)

கடந்த 1980-ம் ஆண்டு வெளியான 'நிழல்கள்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'பூங்கதவே தாழ் திறவாய்' என்ற பாடல் மூலம் பாடகியாக திரை உலகில் உமா ரமணன் அறிமுகமானார்.

சென்னை,

பிரபல பின்னணி பாடகி உமா ரமணன். இவர் சென்னை அடையாறில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த உமா ரமணன் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 69.

1980-ம் ஆண்டு வெளியான 'நிழல்கள்' படத்தில் இடம்பெற்ற 'பூங்கதவே தாழ் திறவாய்...' என்ற பாடல் மூலம் பின்னணி பாடகியாக உமா ரமணன் அறிமுகமானார். அந்த பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து அவருக்கு புகழ் சேர்த்தது. முதல் படத்திலேயே பிரபலம் ஆகி போனார்.

'ஆனந்த ராகம் கேட்கும் காலம்..' 'ஆகாய வெண்ணிலாவே..', 'ஆசை ராஜா ஆரிராரோ...', 'பூபாலம் இசைக்கும்...', 'செவ்வந்தி பூக்களில்...', 'கஸ்தூரி மானே...', 'மேகம் கருக்கையிலே...', 'ஆகாய வெண்ணிலவே...', 'வெள்ளி நிலவே...' போன்ற இவரது பாடல்கள் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டது.

கடைசியாக விஜய் நடித்த 'திருப்பாச்சி' திரைப்படத்தில், 'கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு...' என்ற பாடலை பாடியிருந்தார் உமா ரமணன். பாடல்கள் தவிர மேடைக் கச்சேரிகளிலும் கணவர் ரமணன் உடன் இணைந்து பாடியுள்ளார். ரமணனும் பிண்ணனி பாடகர் தான். ஆயிரக்கணக்கான மேடைக் கச்சேரிகளில் பாடியுள்ள ரமணன், சில படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். தனியார் டி.வி.யில் ஒளிபரப்பான 'சப்த ஸ்வரங்கள்' நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றி ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.உமா ரமணன் இறுதிச்சடங்குகள் சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெறுகிறது.


Next Story