'கொட்டுக்காளி' திரைப்படத்தை விருதுக்கான திரைப்படம் என்று ஒதுக்கிவிடாதீர்கள் - நடிகர் சூரி
'கொட்டுக்காளி' மாதிரியான நல்ல திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற வேண்டும். அதற்கு மக்களாகிய நீங்கள்தான் நல்ல ஆதரவைத் தர வேண்டும் என்று நடிகர் சூரி கூறியிருக்கிறார்.
சென்னை,
`கூழாங்கல்' திரைப்படம் பல அங்கீகாரங்களை இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜுக்குப் பெற்றுத் தந்தது. இதற்குப் பிறகு, இவர் சூரியை வைத்து இயக்கியிருக்கிற திரைப்படம் 'கொட்டுக்காளி'. சிவகார்த்திகேயன் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். இப்படம் பெர்லின், ரோட்டர்டேம் ஆகிய சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்தில் சூரியுடன் மலையாள நடிகை அனா பென் நடித்திருக்கிறார். இதுதான் இவர் நடிக்கும் முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் நேற்று இப்படத்தின் பிரத்யேகக் காட்சி பத்திரிகையாளர்களுக்காகத் திரையிடப்பட்டது. அப்போது பேசிய இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ், "என்னுடைய 'கூழாங்கல்' திரைப்படத்தைப் போலவே 'கொட்டுக்காளி' திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பைக் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இப்படத்தில் ஒரு காட்சி வரும்; ஒரு நம்பிக்கையாக, துணையாக இருக்கும் என்று அம்மா ஒருவர் கை மண்ணை கையில் அள்ளி முந்தனையில் முடிந்துகொள்வார். அது நம்மைக் காப்பாற்றும் என்று நினைத்துக்கொள்வார். அதைப்போல இப்படம் வெற்றிபெற வேண்டும் என்று நாங்கள் இயற்கையை நம்புகிறோம், மக்களை நம்புகிறோம்" என்று பேசியுள்ளார்.
இதையடுத்துப் பேசிய நடிகர் சூரி, "உலகம் முழுவதும் இப்படத்திற்கு நல்ல பாராட்டுகள் கிடைத்திருக்கிறது. விருதுகள் கிடைத்திருக்கின்றன. அப்படி இருக்கையில் நம்ம ஊரில் நிச்சயம் ஒரு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். நம்ம ஊர் மக்கள் நம்ம படத்தைக் கொண்டுவார்கள் என்று நம்புகிறேன். இந்தப் படத்தை பெரிய அளவில், பெரிய பட்ஜெட்டில் வேற மாதிரி பண்ணியிருக்கலாம் இயக்குநர் வினோத்ராஜ். ஆனால், எளிமையாக, மக்களுக்கு நெருக்கமான திரைப்படங்களை எடுக்க வேண்டும் என்று இப்படத்தை எடுத்திருக்கிறார் வினோத்ராஜ். பொதுவாக விருதுகள் வாங்கும் திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க முடியாது என்ற பார்வையிருக்கிறது நம் மக்களிடம். அது மாற வேண்டும். இதுமாதிரியான நல்ல திரைப்படங்களில் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற வேண்டும். அதற்கு மக்களாகிய நீங்கள்தான் நல்ல ஆதரவைத் தர வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.