எனக்கு பா.ஜ.க.தான் சரியா இருக்கும் - நடிகை கஸ்தூரி
தமிழ்நாட்டில் திமுகவிற்குத் தான் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என பா.ஜ.க ஆதரவு பிரச்சாரத்தில் நடிகை கஸ்தூரி கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பா.ஜ.க கூட்டத்தில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பற்றி கஸ்தூரி பேசியுள்ளது பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தனது சர்ச்சைக் கருத்துகளுக்குப் பெயர் போனவர் நடிகை கஸ்தூரி. இப்போதும் அப்படியான ஒரு பேச்சுதான் இவர் மீது மீண்டும் கவனம் குவிய காரணமாக அமைந்திருக்கிறது. இந்து மக்கள் கட்சி சார்பில், 'மீண்டும் மோடி வேண்டும் மோடி' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் கோவை சித்தாபுதூர் பகுதியில் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக நடிகை கஸ்தூரி கலந்துகொண்டார்.
கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை கஸ்தூரி சந்தித்த போது, தமிழகத்தில் தி.மு.க வெற்றி பெறும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது" என்றார். அப்போது அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சத்தமின்றி அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
மேலும், "அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க ஒன்றாக இல்லை. தி.மு.க கட்டுக் கோப்பாக வலுவான கூட்டணி அமைத்து உள்ளதால் அதற்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம். நான் பா.ஜ.க உறுப்பினர் இல்லை. வலது சாரி சிந்தனையாளர் மட்டுமே. என்னுடைய சிந்தனைக்கு ஓரளவுக்கு பாஜக சரியா இருக்கும். பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெறுவது உறுதி என்றும் தனது வாக்கு பாஜகவிற்கு தான் என்றும் தெரிவித்தார்.
நடிகர் விஜய் துவங்கியுள்ள புதிய கட்சியில் 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளது குறித்த கேள்விக்கு, "நான் ஒரு தீவிர விஜய் ரசிகை. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். விஜய் உறுதிப்பாட்டுடன் அரசியலில் வலம் வர வேண்டும்" என்றார்.