நடிகர்களாக மாறும் டைரக்டர்கள்


நடிகர்களாக மாறும் டைரக்டர்கள்
x

பழைய படங்களில் டைரக்டர்களாக இருந்தவர்கள் சினிமாவில் நடித்தது இல்லை. ஆனால் இப்போது காலம் மாறி இருக்கிறது. டைரக்டராக வலம் வந்த பலர் நடிகராக மாறி இருக்கிறார்கள். சினிமாவில் டைரக்டராகும் கனவுடன் வருகிறவர்களைவிட நடிகராகும் ஆசையில் வருபவர்கள் அதிகம். நடிகராக முடியாதவர்கள் கையில் எடுக்கும் இன்னொரு அவதாரம் டைரக்‌ஷன்.

அப்படி தடம் மாறி டைரக்டரானவர்களின் எண்ணிக்கை சினிமாவில் அதிகம். புகழ் பெற்ற இயக்குனர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் துளியுண்டு நடிப்பு ஆசை இருந்திருக்கும். அதை அவர்கள் இயக்கும் படங்களில் எங்கேயாவது ஒரு இடத்தில் வெளிப்படுத்துவது உண்டு

ஒரு இயக்குனர் படம் இயக்குவதற்குள் உயிர் போய் உயிர் வராத நிலைக்கு தள்ளப்படுவார். டைரக்ஷன் வாய்ப்புக்காக பல நாள் ரூம் போட்டு யோசித்த கதையை நடிகர்களிடம் போய் சொல்வார். நடிகருக்கு கதை பிடித்திருந்தாலும் அவருடைய கால்ஷீட் எப்போது ஒதுக்கப்படுகிறதோ அப்போதுதான் படப்பிடிப்பை தொடங்க முடியும்.

அந்த நடிகரின் மார்க்கெட்டுக்கு ஏற்ப செலவு செய்யக்கூடிய தயாரிப்பாளரை அணுகி அவரிடமும் கதை சொல்லி ஓ.கே.வாங்குவார். பிறகு கதாநாயகி, இதர நடிகர்களை தேர்வு செய்தல், படப் பிடிப்பை நடத்துதல், தணிக்கை குழு ஆட்சேபம் செய்தால் திருத்துவது என்று இயக்குனர் தலையில் ஏகப்பட்ட வேலை.

தியேட்டர்களில் படத்தை திரைக்கு கொண்டு வருவதிலும் நிறைய பிரச்சினைகள். பெரிய படங்களுக்கு எளிதாக தியேட்டர்கள் கிடைக்கும் சிறுபட்ஜெட் படங்கள் வெளியாவதில் பெரும்பாடு இருக்கிறது. இப்படி ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு இயக்குனர்கள் பல சவால்களையும், போராட்டங்களையும் சந்திக்க நேரிடுகிறது. அதன் காரணமாகவே இன்று முன்னணி இயக்குனர்கள் நடிகர்களாக மாறியுள்ளனர்.

இயக்குனராக இருக்கும்போது நடிகர், நடிகை, தயாரிப்பாளர் என அனைத்து தரப்புக்கும் பதில் சொல்லவேண்டிய இடத்தில் இருக்கிறார். நடிகராகும்போது ராஜா வாழ்க்கை. இயக்குனாராக இருந்தபோது சில லட்சங்களே சம்பளமாக வழங்குவார்கள். அதே இயக்குனர் நடிகராக இருக்கும்போது சம்பளம் வாரி வழங்கப்படுகிறது. அத்துடன் அவருக்கு என்று உதவியாளர்கள், மேக்கப்மேன், ஹேர் ஸ்டைலிஸ்ட், காஸ்டியூமர் என்று பல தொழில் நுட்ப கலைஞர்களை நியமிப்பதுண்டு. வெளியூர் படப்பிடிப்பு என்றால் விமானத்தில் பிசினஸ் க்ளாஸ் டிக்கெட், ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கும் வசதி என ராயல் லைப் கிடைக்கிறது.

இதனாலேயே இயக்குனர்கள் பலர் நடிகராக மாறி இருக்கிறார்கள். புகழ் பெற்ற இயக்குனர்களாக இருந்த பாக்யராஜ், பாரதிராஜா, பார்த்திபன், சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார், சேரன், எஸ்.ஜே.சூர்யா, கவுதம் மேனன், அமீர், சசிகுமார், சுந்தர்.சி, ராம், மிஸ்கின், தருண் கோபி உள்ளிட்ட பலர் முழு நேர நடிகர்களாகி உள்ளனர்.

பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்து டைரக்டரான பாக்யராஜ் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். பாரதிராஜா இளம் நடிகர்களுக்கு தந்தையாக நடித்து வருகிறார்.

தம்பிராமையா, ரவிமரியா, மாரிமுத்து என்று பலர் நடிகரான டைரக்டர்கள் பட்டியலில் உள்ளனர். ஜெயம்ரவி நடித்த கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் சமீபத்தில் வெளியான லவ் டுடே படம் மூலம் கதாநாயகனாக மாறி உள்ளார்.


Next Story