துப்புரவு தொழிலாளரை அவமதித்தேன் என்பதா? நடிகை ரோஜா வருத்தம்


நடிகை ரோஜா வருத்தம்
x

துப்புரவு தொழிலாளர்கள் செய்யும் பணி உயர்வானது. அவர்கள் மீது எனக்கு மரியாதை இருக்கிறது என்று நடிகை ரோஜா கூறியுள்ளார்.

திருச்செந்தூர்,

தமிழ் திரை உலகில் 1990 மற்றும் 2000-ம் ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ரோஜா திருச்செந்தூர் கோவிலில் இரு தினங்களுக்கு முன்பு சாமி கும்பிட சென்றபோது அவருடன் செல்பி எடுக்க நெருங்கி வந்த துப்புரவு தொழிலாளர்களை சைகை மூலம் தள்ளி நிற்கும்படி சொன்னதாக சர்ச்சை கிளம்பியது. தூய்மை பணியாளர்களை அவமதித்து விட்டதாக ரோஜாவை பலரும் கண்டித்தனர்.

இதற்கு ரோஜா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "நான் திருச்செந்தூர் கோவிலில் கணவருடன் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது நிறைய பேர் செல்பி எடுத்தனர். யாரையும் தடுக்கவில்லை. துப்புரவு தொழிலாளர்கள் சிலரும் செல்பி எடுக்க ஓடி வந்தனர்.

கோவில் தரைதளம் தாழ்வாக இருந்ததால் அவர்கள் ஓடி வந்தால் விழுந்து விடப்போகிறார்கள் என்று கருதி மெதுவா வாங்க என்று மட்டும்தான் கைகாட்டி பேசினேன். அவர்களை நான் தொடக்கூடாது தள்ளி நில்லுங்கள் என்று சொன்னதாக தவறாக சித்தரித்து இருக்கிறார்கள். துப்புரவு தொழிலாளர்கள் செய்யும் பணி உயர்வானது. அவர்கள் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அவர்களை தொட வேண்டாம் என்று எப்படி சொல்வேன். என் மீது காழ்ப்புணர்ச்சியோடு அவதூறு பரப்புவது வருத்தம் அளிக்கிறது'' என்றார்.


Next Story