தனுஷின் 'ராயன்' படத்தின் டிரெய்லர் வெளியானது


தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராயன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் தனுஷ் தனது 50 வது படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இப்படத்துக்கு 'ராயன்' என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிலையில், 'ராயன்' படத்திற்கு சென்சாரில் 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், புதிய போஸ்டர் ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து, படத்தின் முதல் பாடலான 'அடங்காத அசுரன்' வெளியாகி தனுஷின் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. இந்த திரைப்படம் வடசென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டிரெய்லர் தொடக்கத்தில் செல்வராகவன் தனுஷிடம் காட்டுல ஆபத்தான மிருகம் எது தெரியுமா? என கேட்பது போல் தொடங்குகிறது. இந்த டிரெய்லரை பார்க்கும்போது தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் ஆகியோர் அண்ணன் தம்பிகளாக நடித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்களுக்கு தங்கையாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். இதன்மூலம் எஸ் ஜே சூர்யா படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எஸ் ஜே சூர்யா தைரியம் இருந்தால் எனது இடத்தில் வந்து செய்யப்பட்டும் என கர்ஜிக்க, அதன்பின் தனுஷ் ரவுடி கூட்டத்தை வேட்டையாடுவது போன்று முடிவடைகிறது. டிரைலரில் மிரட்டலான ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story