உம்மன்சாண்டி குறித்து அவதூறு: விஷால் பட நடிகர் விநாயகன் மீது வழக்குப்பதிவு..!
மறைந்த கேரள முன்னாள் மந்திரி உம்மன் சாண்டி குறித்து நடிகர் விநாயகன் சர்ச்சையான வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
திருவனந்தபுரம்,
மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வரும் விநாயகன் தமிழில் விஷாலின் 'திமிரு' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர். தொடர்ந்து சிம்புவின் சிலம்பாட்டம், தனுசின் மரியான் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த இவர் சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விநாயகன், மறைந்த கேரள முன்னாள் மந்திரி உம்மன் சாண்டி குறித்து சர்ச்சையான வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "யார் இந்த உம்மன் சாண்டி. எதற்காக அரசு மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்க வேண்டும். ஊடகங்கள் ஏன் அவரது இறுதி ஊர்வலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தன. உம்மன் சாண்டி நல்லவர் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் என்ன பண்ண முடியும்?" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து கேரள முன்னாள் மந்திரி உம்மன் சாண்டியை அவமதித்ததற்காக நடிகர் விநாயகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் நடிகர் விநாயகன் மீது எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விநாயகன் பதிவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்ததால் அவர் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.