கொலை மிரட்டல் கடிதம்: நடிகர் சல்மான்கானிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு


கொலை மிரட்டல் கடிதம்: நடிகர் சல்மான்கானிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு
x

கொலை மிரட்டல் கடிதம் குறித்து நடிகர் சல்மான்கானிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் மும்பை பாந்திரா பகுதியில் வசித்து வருகிறார். இவரது தந்தை சலீம்கான் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாந்திரா பேண்டுஸ்டாண்டு கடற்கரையில் நடைபயிற்சி சென்றுவிட்டு அங்குள்ள பெஞ்சில் உட்கார்ந்து இருந்தபோது, மர்மநபர் ஒருவர் அவர் அருகே கடிதம் ஒன்றை போட்டு சென்றார். அந்த கடிதத்தில் சல்மான்கான், சலீம்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில், "சலீம் கான், சல்மான் கான் விரைவில் சித்து மூஸ்வாலாவின் கதியை சந்திப்பீர்கள்" என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் கடிதத்தில் ஜி.பி., எல்.பி. என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

பஞ்சாப் பாடகர் சித்துவை போல கொல்லப்போவதாகவும், அதில் இடம் பெற்றுள்ள எல்.பி. என்பது பஞ்சாப்பை சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் ஜி.பி. என்பது லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளி கோல்டி பிரார் என்பதாகவும் கருதப்படுகிறது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சல்மான் கான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கொலை மிரட்டல் கடிதம் தொடர்பாக சலீம் கானிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நடிகர் சல்மான் கானிடமும் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து சல்மான்கான் ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.


Next Story