தினமும் 50 பேருக்கு மதிய உணவு... விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் புகழ் அறிவிப்பு


தினமும் 50 பேருக்கு மதிய உணவு... விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் புகழ் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Jan 2024 10:53 AM IST (Updated: 24 March 2024 8:35 PM IST)
t-max-icont-min-icon

தனது அலுவலகத்தில் உணவளித்த வீடியோவை சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சென்னை,

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது. விஜயகாந்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. இவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.

மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜயகாந்தின் நினைவிடத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் புகழ் நேற்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'விஜயகாந்த் பசி என்று வந்தவர்களுக்கு எல்லாம் இல்லை என்று சொல்லாமல் உணவளித்தார். நானும் இன்று முதல் அவரின் வழியை பின்பற்ற உள்ளேன். தினமும் கே.கே.நகரில் உள்ள எனது அலுவலகத்தில் 50 பேருக்கு மதிய உணவளிக்க முடிவு செய்துள்ளேன்.

முதலில் 50 பேரில் இருந்து சேவையை தொடங்குகிறேன். அவரிடம் ஆசிர்வாதம் பெற்று இதனை தொடங்க வேண்டும் என்பதால் இங்கு வந்தேன். கேப்டன் சாருக்கு என்னால் முடிந்தது இதுதான்' என்று தெரிவித்தார்.

இதற்கிடையே நடிகர் புகழ் நேற்று தனது அலுவலகத்தில் 50 பேருக்கு உணவளித்த வீடியோவை சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், 'நீ வீணாக்கும் உணவு மற்றொருவரின் பசி என்பதை மறந்து விடாதே' என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த செயலை பலரும் பாரட்டி வருகின்றனர்.


Next Story