நடிகை திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு - பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கண்டனம்
பெண்கள் மீதான அவதூறு தாக்குதல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு களைய வேண்டும் என ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சேலம் மேற்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு, சமீபத்தில் கொடுத்த பேட்டி சர்ச்சையாகியுள்ளது. அதில், நடிகை திரிஷா மற்றும் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் குறித்து அவர் பேசிய பேச்சுக்கு தென் இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"இன்றைய சமூக வலைதளங்களில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜி என்பவர் திரைத்துறையை குறித்து சில தரமற்ற, அவதூறுகளை கூறியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடந்த போட்டியில் 2017-ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை திரிஷா அவர்களை சம்மந்தப்படுத்தி ஒரு அவதூறை கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாது பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் கருணாஸ் அவர்களையும் சம்மந்தப்படுத்தி இந்த கீழ்தரமான செய்தியை வெளியிட்டுள்ளார்.
அரசியலில் ஒருவரை, ஒருவர் தாக்கி கொள்வதற்கு அவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அரசியல் பிரச்சனையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றசாட்டுகளை, கீழ்தரமான அவதூறுகளை திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம். இத்தகைய அநாகரிகமான கீழ்தரமான செயலை, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறோம்.
பஞ்சாயத்து தலைவரிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர் முதல் பாரத குடியரசின் தலைவராக முர்மு அவர்கள் வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற, இந்த பாரத தேசத்தில் "பெண்கள் மீதும் அவர்களின் பெண்மை மீதும்" நடத்தப்படுகின்ற இம்மாதிரியான அவதூறு தாக்குதலை இரும்பு கரம் கொண்டு களைய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்களுக்கு பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்."
இவ்வாறு ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.