நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்ட பதிவால் சர்ச்சை... மும்பை போலீசார் பரபரப்பு
நடிகர் அமிதாப் பச்சன் அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு அவருக்கு எதிரான சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.
புனே,
நடிகர் அமிதாப் பச்சன் சமூக ஊடகத்தில் தனது பணி சார்ந்த விசயங்கள், முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை அவ்வப்போது ரசிகர்களுக்கு பகிர்ந்து கொள்வது வழக்கம்.
சமீபத்தில் படப்பிடிப்பின்போது, காயம் ஏற்பட்டு அதற்காக ஓய்வில் இருந்த அவர், அதன்பின் அதில் இருந்து மீண்டு வந்து உள்ளார். தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இதுபற்றிய விவரங்களையும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
இதற்காகவே அவரது தீவிர ரசிகர்கள் அவரை பின் தொடருகின்றனர். டுவிட்டரில் அவர் நாலரை கோடிக்கும் கூடுதலான பாலோயர்களை கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் 3.4 கோடி பேர் அவரை பின்தொடருகின்றனர்.
இந்நிலையில், பைக் ஒன்றில் பின்னால் அமர்ந்தபடி அவர் பயணிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார்.
அதன் தலைப்பில், சவாரி கொடுத்ததற்காக நன்றி நண்பரே... உங்களை யாரென தெரியாது. ஆனால், தீர்க்க முடியாத போக்குவரத்து நெருக்கடியை தவிர்த்து, நீங்கள் என்னை பணி செய்யும் இடத்திற்கு சரியான நேரத்திற்கு, விரைவாக கொண்டு சென்று விட்டு விட்டீர்கள்.
தொப்பி போட்ட, ஷார்ட்ஸ் அணிந்த மற்றும் மஞ்சள் வண்ண டி-சர்ட்டின் உரிமையாளருக்கு எனது நன்றிகள் என பதிவிட்டு உள்ளார். இதற்கு 6 லட்சம் பேர் லைக் தெரிவித்து உள்ளனர்.
எனினும், இந்த பதிவை கவனித்து சிட்டிசன்ஸ் மூவ்மெண்ட், கிழக்கு பெங்களூரு என்ற பெயரில் டுவிட்டரில் பகிர்ந்த தகவலானது, நடிகர் அமிதாப் பச்சனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பதிவில், வண்டியை ஓட்டுபவர் மற்றும் பின்னால் உள்ளவர் என இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. மும்பை போலீசார் தயவு செய்து, இதனை கவனத்தில் கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பதிவுக்கு பதிலாக, போக்குவரத்து பிரிவுக்கு இந்த செய்தியை நாங்கள் பகிர்ந்து உள்ளோம் என மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர்.
நடிகர் அமிதாப் பச்சனிடம் விலையுயர்ந்த பல ஆடம்பர ரக கார்கள் உள்ளன. ஆனால், போக்குவரத்து நெருக்கடியின்போது சரியான நேரத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அதற்கு அந்த கார்கள் உதவாது.
ஒன்று நீங்கள் நடந்து செல்ல வேண்டும். அல்லது இரு சக்கர வாகனத்தில் பயணிக்க வேண்டும். எனினும், சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை என்பதற்காகவும், மக்களின் பாதுகாப்பிற்காக அவை பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காகவே விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன என்பதற்கும் எடுத்துக்காட்டாக இந்த விசயம் அமைந்து உள்ளது.