நடிகர் சங்கத்தில் இருந்து பாக்யராஜ் நீக்கத்துக்கு கண்டனம்
பாக்யராஜை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கியது வருத்தமளிக்கிறது என நடிகர் உதயா நடிகர் சங்கத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தென் இந்திய நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நாசரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த பாக்யராஜ் நடிகர் சங்க நிர்வாகத்தை பற்றி உண்மைக்கு மாறான கருத்துகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். நடிகர் உதயாவையும் சங்கத்தில் இருந்து நீக்கி உள்ளனர்.
இதையடுத்து பாக்யராஜ் மகனும், நடிகருமான சாந்தனு டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "எவ்வளவு கீழ இறங்க முடியுமோ, அவ்வளவு இறங்கிப்பாக்குறீங்க... திருத்த முடியாது. இந்த பதிவானது படத்திற்கோ ரசிகருக்கோ சமந்தமில்லாதது" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம் பாக்யராஜை நீக்கிய நடிகர் சங்கத்தை மறைமுகமாக அவர் சாடி இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் உதயா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்று கருதப்படும் பாக்யராஜை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கியதை வன்மையாக கண்டிக்கிறேன். கடந்த தேர்தலில் தலைவராக போட்டியிட்டதற்காக அவரை நீக்கியது பெரும் குற்றம். என்னையும் நீக்கி உள்ளனர். இது பழிவாங்கும் செயல். கேள்வி கேட்பவர்கள் அனைவரையும் நீக்குகிறார்கள். இப்படி உறுப்பினர்களை நீக்குவது எதற்கும் தீர்வாகாது" என்று கூறியுள்ளார்.