ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கிய 'சன்ஷைன் ஆர்கெஸ்ட்ரா' மாணவர்கள் நடத்திய சிறப்பு இசை நிகழ்ச்சி
சன்ஷைன் ஆர்கெஸ்ட்ராவில் தற்போது பயின்று வரும் சிறுவர், சிறுமியர்கள் முதல் முறையாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தங்கள் பொது கச்சேரியை அரங்கேற்றியுள்ளனர்.
சென்னை,
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் கனவு திட்டங்களுள் ஒன்றாக ஆரம்பிக்கப்பட்டது 'தி சன்ஷைன் ஆர்கெஸ்ட்ரா'(The Sunshine Orchestra). இந்த இசைக்குழுவில் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின் தங்கிய மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உலகத் தரமான இசைப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த இசைக்குழுவில், அப்போது இணைந்த சிறுவர், சிறுமிகள் எல்லாம் இப்போது 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களின் பெயர் பட்டியலில் இடம்பிடித்துவிட்டனர்.
அது மட்டுமின்றி மிக பிரம்மாண்டமான முறையில் அண்மையில் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் கலை நிகழ்ச்சிகளிலும் 'சன்ஷைன் ஆர்கெஸ்ட்ரா' இசைக்குழுவைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று அசத்தினர்.
இந்த நிலையில் சன்ஷைன் ஆர்கெஸ்ட்ராவில் தற்போது பயின்று வரும் சிறுவர், சிறுமியர்கள் முதல் முறையாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தங்கள் பொது கச்சேரியை அரங்கேற்றியுள்ளனர். சென்னை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள தக்ஷின சித்ரா அருங்காட்சியகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
அவர்களோடு சன்ஷைன் ஆர்கெஸ்ட்ராவின் முன்னாள் மாணவர்களும், கே.எம். இசைக்கல்லூரி மாணவர்களும் இணைந்து இசை மேடையை அலங்கரித்தனர். கூடவே பாடகர் திருமூர்த்தியும் அவர்களோடு இணைந்து பாடல்களை பாடி அசத்தினார். நாட்டுப்புற பாடல்களோடு, மேற்கத்திய இசைக்கருவிகளை சேர்த்து மாணவர்கள் நிகழ்த்திய இசைக்கச்சேரி காண்போரை வெகுவாக கவர்ந்தது.