குடியரசு தினத்தை அவமதித்ததாக பிரபல நடிகை மீது வழக்கு
குடியரசு தினத்தை அவமதித்ததாக பிரபல நடிகை ரச்சிதா ராம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
பிரபல கன்னட நடிகை ரச்சிதா ராம். இவர் தர்ஷன், ரவிச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள 'கிராந்தி' என்ற படம் குடியரசு தினமான வருகிற 26-ந்தேதி திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் சினிமா பட விழாவில் ரச்சிதா ராம் பங்கேற்று பேசும்போது, குடியரசு தினத்தை அவமதித்து கருத்து தெரிவித்ததாக எதிர்ப்புகள் கிளம்பின. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலைத்தளத்தில் பலர் வற்புறுத்தினர்.
ரச்சிதா ராம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கர்நாடக மாநில அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் சிவலிங்கப்பா மாத்தூர் போலீசில் புகார் செய்தார். அவர் அளித்த புகார் மனுவில், ''நடிகை ரச்சிதா ராம் குடியரசு தினத்தை மறந்து 'கிராந்தி' படத்தை கொண்டாடுங்கள் என்று பேசி இருக்கிறார்.
இது அரசியல் அமைப்புக்கு எதிரானது. அரசியல் அமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாளை அவமதிக்கும் செயல் ஆகும். எனவே ரச்சிதா ராம் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளார். ரச்சிதா ராம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.