பாக்யராஜ் பகிர்ந்த சினிமா அனுபவங்கள்
‘லாக்' பட விழா நிகழ்ச்சியில் டைரக்டர் பாக்யராஜ் பங்கேற்று பேசும்போது தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்தார்.
'லாக்' என்ற பெயரில் தயாராகி உள்ள புதிய படத்தில் நாயகனாக சுதிர், நாயகியாக மதுஸ்ரீ நடித்துள்ளனர். ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். ராஜ்குமார் வேலுச்சாமி தயாரித்துள்ளார். 'லாக்' பட விழா நிகழ்ச்சியில் டைரக்டர் பாக்யராஜ் பங்கேற்று பேசும்போது தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்தார்.
அவர் கூறும்போது, ''இத்தனை காலம் கடந்தும் எனது படத்தில் வைத்திருந்த முருங்கைக்காய் கதையை எங்கு பார்த்தாலும் பேசுகிறார்கள். சிறிய வயதில் எனது பாட்டி உணவு பரிமாறும்போது முருங்கைக்காய் துண்டுகளை எனது மாமாவுக்கு அதிகமாகவும், எனக்கு குறைவாகவும் போடுவார். ஒரு பெரியவரிடம் கேட்டு காரணத்தை அறிந்து அதை படத்தில் சாதாரணமாகத்தான் வைத்தேன்.
ஆனால் இவ்வளவு காலம் கடந்தும் முருங்கைக்காய் காட்சி பேசப்படுவது மகிழ்ச்சி தருகிறது. சின்ன வீடு படத்தில் எடை கூட வேண்டும் என்பதற்காக கல்பனாவுக்கு தினசரி அல்வா கொடுத்தேன். 'தூறல் நின்னு போச்சு' படத்தில் 30 நாட்கள் கம்பை சுற்றி பயிற்சி எடுத்துக்கொண்ட பிறகுதான் நடித்தேன். மிகவும் சிரமப்பட்டு கம்பை சுற்றி இருப்பேன். படத்தை பார்த்து எம்.ஜி.ஆர். எத்தனை வருடமாக இதற்கு பயிற்சி எடுத்தாய் என்று கேட்டார். நான் விஷயத்தை சொன்னபோது அவர் நம்பவே இல்லை. மனம் வைத்தால் எதுவும் நடக்கும்'' என்றார்.